மருத்துவமனையில் நந்தினியும் குழந்தையும் 
தமிழகம்

கரோனாவை சொல்லித் தட்டிக் கழிக்காமல் கர்ப்பிணிக்கு இலவசப் பிரசவம்: மேட்டுப்பாளையம் மருத்துவத் தம்பதியின் மனிதாபிமானம்

கா.சு.வேலாயுதன்

‘கரோனா அச்சம் காரணமாகப் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டுவிட்டன; திறந்திருக்கும் மருத்துவமனைகளிலும் போதிய மருத்துவர்கள் இல்லை’ எனும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில், அனாதரவாகத் தவித்த ஓர் ஏழைப் பெண்ணுக்குக் கட்டணமின்றிப் பிரசவம் பார்த்ததன் மூலம், பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகளை அள்ளி வருகிறார்கள் மேட்டுப்பாளையத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனை டாக்டர் தம்பதியினர்.

கரோனா தொற்றுக்குள்ளானவர்கள் சிகிச்சை பெற்றுவந்த அரசு மருத்துவமனையிலிருந்து வந்த பெண் என்று தெரிந்திருந்தும் கரோனா தொற்று அபாயம் பற்றியெல்லாம் கவலைப்படாமல், அந்தப் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்திருக்கிறார்கள் இந்த டாக்டர் தம்பதியர்!

அந்தக் கர்ப்பிணியின் பெயர் நந்தினி. அவர் ‘வெல்டிங்’ தொழிலாளியான ராயனை 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்துள்ளார். இருவரும் மேட்டுப்பாளையத்தில் வசித்துவந்த நிலையில், ராயன் வேலை தேடி வெளிமாநிலத்துக்குச் சென்றுவிட்டார். இதற்கிடையில் கரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், ராயனால் ஊர் திரும்ப இயலவில்லை.

இந்த நேரத்தில், நிறைமாதக் கர்ப்பிணியான நந்தினிக்குப் பிரசவ வலி எடுக்க, தனியாகவே மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அவர் வந்துள்ளார். அவரைச் சோதித்த அரசு மருத்துவர்கள், ‘வயிற்றில் குழந்தையின் தலை திரும்பியுள்ளது’ என கோவை அரசு பொது மருத்துவமனைக்குப் பரிந்துரை செய்துள்ளனர். அந்த நேரத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 20 பேர் மேட்டுப்பாளையம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால், மருத்துவமனை வளாகமே பரபரப்பாக இருந்தது.

இப்படியான சூழலில் அங்கிருந்து தனியாகக் கோவை செல்வது எப்படி என்று தவித்துக்கொண்டிருந்த நந்தினியைப் பார்த்த சில தன்னார்வலர்கள், உடனடியாக உதவிக்கு வந்தனர். துணை யாரும் இல்லாத நிலையில் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவை அரசு மருத்துவமனைக்கு அவர் செல்வது ஆபத்தானது என்று முடிவெடுத்த அவர்கள், உள்ளூரில் உள்ள சூர்யா மருத்துவமனையை அணுகி உதவி கேட்டுள்ளனர்.

அதன் தலைமை மருத்துவர்களான டாக்டர் சுதாகர், டாக்டர் புவிதா இருவரும் தம்பதியர். நிலைமையைப் புரிந்துகொண்ட அவர்கள் தங்கள் மருத்துவமனையின் தனி வார்டில் நந்தினியை அனுமதித்தனர். அதுமட்டுமல்ல, கட்டணம் ஏதுமின்றிப் பிரசவம் பார்த்தனர். அங்கே நந்தினிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயையும் சேயையும் நான்கு நாட்கள் மருத்துவமனையில் வைத்திருந்த மருத்துவர்கள், பின்னர் ஒரு காப்பகத்தில் அவர்களைச் சேர்த்துள்ளனர்.

சோதனையான நேரத்தில் பெரும் சேவை செய்த டாக்டர் தம்பதிக்குப் பாராட்டுகள் குவிந்துவரும் நிலையில், அவர்களிடம் பேசினோம்.

தொடர்ந்து இப்படியான சேவைகளைச் செய்றீங்களா?
நாங்க இந்த ஊருக்கு வந்து 30 வருஷம் ஆய்டுச்சு. அப்பப்போ ஏதாவது ஒரு உதவி கேட்டு வருவாங்க. எங்களால முடிஞ்ச வரைக்கும் உதவுவோம். நந்தினிக்குப் பிரசவ வலி வந்தப்போ, அவரோட கணவர் ஊர்ல இல்லை. அவரோட அம்மாவும் விட்டுட்டுப் போயிட்டாங்க. இங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அந்தப் பொண்ணு தனியாவே வந்திருந்தாங்க போல. அங்க அந்தப் பெண்ணுக்கு பிரசவ வலி வந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கு. உடனே, “இங்கே பார்க்க முடியாது; ஆஸ்துமா நோயாளி”ன்னு கோவை அரசு மருத்துவமனைக்கு ரெஃபர் பண்ணியிருக்காங்க. கூட யாருமில்லை. அதைப் பார்த்த அந்த ஏரியா கவுன்சிலரும், வித்தியாலயத்தில் ஒருத்தரும் எங்ககிட்ட பேசினாங்க. உடனே கூட்டிட்டு வரச் சொல்லிட்டோம்.

டாக்டர் தம்பதி புவிதா, சுதாகர்

கரோனா தொற்றுக்குள்ளான நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில இருந்து வந்த கர்ப்பிணிக்குப் பிரசவம் பார்க்கும் துணிச்சல் எப்படி வந்தது... உங்களுக்குக் கரோனா அச்சம் இல்லையா?
பயம் இருக்கத்தான் செய்யும். இருந்தாலும் கடமைன்னு ஒண்ணு இருக்கே. வர்ற நோயாளிகள்கிட்ட ஆறு கேள்விகள் கேட்கணும்னு இந்தியன் மெடிக்கல் கவுன்சில் எங்களுக்குச் சொல்லியிருக்கு. இருமல், தொண்டை வலி, காய்ச்சல் இருக்கா, அவங்க ஏதாவது வெளிநாடு போயிட்டு வந்தாங்களா, அல்லது வெளிநாடு போயிட்டு வந்தவங்களோட தொடர்பு இருந்திருக்கான்னு விசாரிக்கணும்.

இதுல எந்தச் சந்தேகமும் இல்லைன்னா நம்மோட பாதுகாப்பை உறுதி செஞ்சுட்டு சிகிச்சை அளிக்கிறோம். நந்தினிக்குக் கரோனா அறிகுறி ஏதும் இல்லை. அதனால துணிச்சலோட பிரசவம் பார்த்தோம். அவரோட பக்கத்து வீட்டுப் பெண் உடன் இருக்கிறேன்னு வந்திருந்தாங்க. அவங்களை மட்டும் அனுமதிச்சோம்.

பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டிருப்பது மக்கள்கிட்ட அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கே?
எல்லோருக்குமே உயிர் பயம் இருக்கத்தானே செய்யும். தனியார் மருத்துவமனையில இதை எல்லாம் அதிக ரிஸ்க் எடுத்துத்தான் பண்ண வேண்டியிருக்கு. செய்யலைன்னா செய்யலைன்னு பிரச்சினை வரும். செஞ்சு ஏதாவது ஆயிட்டா ‘நாங்கதான் அரசாங்கத்துல எல்லாம் பண்றோமே... எதுக்கு நீங்க ரிஸ்க் எடுத்து இதைப் பண்ணணும்?’னு ஒரு கேள்வி வரும். எது வந்தாலும் எதிர்கொண்டுதான் ஆகணும். மனிதாபிமான அடிப்படையில் இதையெல்லாம் செய்றதுதானே மருத்துவர்களோட கடமை!

இவ்வாறு டாக்டர் தம்பதியினர் கூறினர்.

SCROLL FOR NEXT