தமிழகம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெல் உற்பத்தி, கொள்முதல் இல்லாமல் வறுமையில் தவிக்கும் விவசாயிகள்

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் நெல்லை உற்பத்தி செய்யவும் முடியாமல், ஏற்கெனவே உற்பத்தியான நெல்லை விற்கவும் முடியாமல் தவித்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர், வாலாஜாபாத், காஞ்சிபுரம் சுற்றியுள்ள கிராமங்களில் அதிக அளவில் நெல் விவசாயம் நடைபெறுகிறது. காஞ்சிபுரம் நகரில் கரோனா பாதிப்பு காரணமாக 9 வார்டுகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டன.

இதனால், இப்பகுதிக்குள் இருக்கும் உரக்கடைகளும் மூடப்பட்டன. இதனால் விவசாயத்துக்கு தேவையான உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றை வாங்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

நெல் மூட்டைகள் தேக்கம்

அதேபோல் உற்பத்தி செய்த நெல்லை விற்க முடியாமல் பலவிவசாயிகள் அவதியுற்று வருகின்றனர். பல நூறு ஏக்கர் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட நெல் அறுவடை செய்யப்பட்டு காஞ்சிபுரம், வாலாஜாபாத்,உத்திர மேரூரை சுற்றியுள்ளநெல் கொள்முதல் நிலையங்களுக்கு வந்துள்ளன. அவை கொள்முதல் செய்யப்படாமல் அப்படியே உள்ளன.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு சாக்கு மூட்டைகள் வந்து சேரவில்லை என்றும், அவை வந்தால்தான் நெல்கொள்முதல் செய்ய முடியும் என்றும் அலுவலர்கள் தெரிவிப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன.

எனவே, மூடப்பட்ட மார்கெட் பகுதிகளுக்கு இடம் ஒதுக்கியதுபோல் விவசாய உற்பத்திக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யவும் இடம் ஒதுக்கித்தர நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

SCROLL FOR NEXT