நீரிழிவு, இதய நோய் உட்பட தொற்றா நோய்களுக்காக சிகிச்சையில் உள்ள ஏழைகளுக்குத் தரப்படும் இலவச மருந்து, மாத்திரைகளை ஜிப்மர் நிறுத்தியுள்ளது.
புதுச்சேரியில் கோரிமேடு பகுதியில் அமைத்துள்ளது ஜிப்மர் மருத்துவமனை. மத்திய அரசின் கட்டுபாட்டில் இந்த மருத்துவமனை இயங்கி வருகிறது.
கரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் 23 முதல் ஜிப்மர் மருத்துவமனையில் தோல், எலும்பு முறிவு, கண், உடற்பயிற்சி சிகிச்சை, உளவியல், மற்றும் பல் மருத்துவத் துறைகளின் வெளிப்புற சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இச்சூழலில் இப்பிரிவுகளில் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை தர ஜிப்மரில் மறுப்பதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
சிகிச்சை தொடர்ந்து தர வேண்டும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவுறுத்தியும் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.
இந்நிலையில், புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகம் தொற்றா நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு மாதந்தோறும் வழங்கும் மருந்து, மாத்திரைகளை நிறுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஜிப்மர் பாதுகாப்புக்குழு தலைவர் முருகன், பொதுச்செயலர் பாலமோகனன் ஆகியோர் முதல்வரிடம் வலியுறுத்தியது தொடர்பாக கூறுகையில், "தொற்றா நோய்களான நீரிழிவு நோய், மனநோய், இதய நோய், நரம்பியல், இதய அறுவை சிகிச்சை நோயியல், நரம்பு அறுவை சிகிச்சை நோயியல், சிறுநீரகவியல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, புற்றுநோய் ஆகியவற்றுக்கு ஜிப்மரில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பல ஏழைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சையில் உள்ளோருக்கு மாதந்தோறும் இலவசமாக தர வேண்டிய மருந்து மாத்திரைகளை ஜிப்மர் நிறுத்தியுள்ளது. தற்போது ஊரடங்கு அமலில் உள்ள சூழலில் பணி இல்லாத நிலையில் ஏழைகள் உள்ளனர். அவர்களுக்கு இலவசமாக தரப்படும் மருந்து, மாத்திரைகளை நிறுத்துவது தவறானது. அதில் தலையிடுமாறு முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளோம்" என்று தெரிவித்தனர்.