பால் தினகரனின் கடிதத்தை கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியிடம் வழங்கிய காருண்யா சீஷா மருத்துவமனை முதன்மை செயல் அதிகாரி சாமுவேல் தாமஸ், மக்கள் தொடர்பு அதிகாரி ஜெபசிங். 
தமிழகம்

கரோனோ சிகிச்சை மையம்: காருண்யா அறக்கட்டளை வளாகத்தைப் பயன்படுத்திக்கொள்ள பால் தினகரன் ஒப்புதல்

ஆர்.கிருஷ்ணகுமார்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள காருண்யா அறக்கட்டளை வளாகத்தை கரோனா வைரஸ் தாக்கும் நோயாளிகளை தனிமைப்படுத்தும் வார்டாகப் பயன்படுத்திக் கொள்ள காருண்யா பல்கலைக்கழக வேந்தர் பால் தினகரன் ஒப்புதல் அளித்துள்ளார்.

இது தொடர்பாக காருண்யா நிர்வாகம் இன்று (ஏப்.16) வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளவர்களுக்கும், தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கும் தேவையான வைரஸ் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கென மத்திய, மாநில அரசுகளுக்கு உதவும் வகையில், காருண்யா கல்லூரி நிர்வாகத்துக்குச் சொந்தமாக பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள காருண்யா அறக்கட்டளை வளாகத்தைப் பயன்படுத்திக்கொள்ள, காருண்யா பல்கலைக்கழக வேந்தர் பால் தினகரன் தமிழக அரசுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

காருண்யா அறக்கட்டளை வளாகத்தில் 400 படுக்கை வசதிகள், ஆண், பெண்களுக்கென தனித்தனியாக நல்ல சூழலில் உள்ளன. மேலும், சிறந்த வசதிகளுடன் உணவுக் கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளதால், இங்கு நோயாளிகளை நல்ல முறையில் பராமரிக்க வசதிகள் உள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான பால் தினகரனின் கடிதத்தை, காருண்யா சீஷா மருத்துவமனை முதன்மை செயல் அதிகாரி சாமுவேல் தாமஸ், மக்கள் தொடர்பு அதிகாரி ஜெபசிங் ஆகியோர் கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியிடம் ஒப்படைத்தனர்.

SCROLL FOR NEXT