திருநெல்வேலியில் தனியார் தங்கும் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 8 ஊழியர்களுக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் முதன்முதலாக ராதாபுரம் வட்டம் சமூகரெங்கபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தபோது திருநெல்வேலியிலுள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்தது தெரியவந்ததும். அந்த விடுதிக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.
அந்த விடுதியிலிருந்த 8 ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டு 14 நாட்கள் கண்காணிக்கப்பட்டுவந்தனர்.
இந்நிலையில் நோயிலிருந்து குணமடைந்த அந்த இளைஞர் கடந்த சில நாட்களுக்குமுன் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து தனியார் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 8 ஊழியர்களின் ரத்தமாதிரிகளை ஆய்வு செய்தபோது அவர்களுக்கு நோய் தொற்று இல்லை என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.