தமிழகம்

மதுரையில் கரோனா தடுப்புப் பணி போலீஸாருக்கு குறைந்த விலையில் பழங்கள்: காவல் நிலையங்களில் கிடைக்க ஏற்பாடு

என்.சன்னாசி

மதுரையில் ஊரடங்கு பாதுகாப்புp பணியிலுள்ள போலீஸார் தங்களது குடும்பத்தினருக்கு தேவையான பழங்களை சலுகை விலையில் வாங்கிச் செல்ல சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கரோனாவை தடுக்க, ஊரடங்கு உத்தரவு மே 3-ம் தேதி வரை கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் இந்த உத்தரவை அமல்படுத்தும் விதமாக போலீஸார் ஏ,பி,சி என்ற சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அத்தியாவசியம் தவிர, தேவையின்றி வெளியில் வருவோரிடமும், மார்க்கெட் பகுதி உட்பட அத்தியவாசியப் பொருட்கள் வாங்கும் இடங்களிலும் மக்கள் சமூக விலகல், கை சுத்தம், முகக்கவசம் அணிதல் குறித்து போலீஸார் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர்.

இது போன்ற தொடர் பணியில் இருந்துவிட்டு, வீடுகளுக்குச் செல்லும் போலீஸார், தங்களது குடும்பத்தினருக்கு தேவையான பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் செல்ல முடியாத நிலையில், கடைகளைத் தேடி அலைய வேண்டியுள்ளது.

இதை கருத்தில் கொண்டு அண்ணாநகர், மதிச்சியம், புதூர், காவல் நிலையங்களில் குறைந்த விலையில் தரமான பழவகை பார்சல்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நகர் காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆலோசனையின் படி, அண்ணாநகர் காவல் உதவி ஆணையர் லில்லி கிரேஸ் இதற்கான ஏற்பாட்டை செய்துள்ளார்.

அவர் கூறுகையில், இரவு, பகல் என, தங்களின் குடும்பங்களை விலகி, கரோனா பாதிப்பில் இருந்து மக்கள் காக்கும் பணியில் ஈடுபடுகிறோம். பணி முடிந்து வீடுகளுக்கு திரும்பும் ஒவ்வொரு வரும் தங்களது குடும்பத்தினருக்கு தேவையான பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் செல்லும் கட்டாயச் சூழல் உள்ளது.

இதை மனதில் கொண்டு தரமான பழங்கள் அடங்கிய பார்சல்களை வாங்கி கொடுக்க திட்ட மிட்டோம். இதன்படி, 3 நாளுக்கு ஒருமுறை மதிச்சியம், புதூர், அண்ணாநகர் காவல் நிலையங்களில் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளோம்.

வெளியில் கிடைக்கும் விலையைவிட சலுகையில் வழங்கப்படும். இது போலீஸாருக்கு பயனுள்ளதாக இருக்கிறது, என்றார்.

SCROLL FOR NEXT