நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஆட்டோ ஓட்டுநரான ஷாஜிக்கு, நலவாரியத்தில் பதிவு செய்யாததால் அரசின் உதவித்தொகை கிடைக்காதது குறித்தும், அதனால் அவரது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருப்பது குறித்தும் 'இந்து தமிழ் திசை' இணையதளத்தில் நேற்று செய்தி வெளியாகி இருந்தது.
இந்தச் செய்தியின் எதிரொலியாக அவருக்கு பொதுமக்கள் தரப்பிலிருந்து பலரும் உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள்.
நாகர்கோவில் கலைநகரைச் சேர்ந்த ஷாஜி தவழ்ந்து செல்லும் நிலையிலான மாற்றுத்திறனாளி. ஆட்டோ ஓட்டுநரான இவர் தன் வீட்டு வாசலிலேயே ஆட்டோவை நிறுத்தியுள்ளார். தொலைபேசி வழியாக வரும் அழைப்புகள் மூல ம்மட்டுமே பயணிகளை ஏற்றிச்சென்று வந்த ஷாஜி, தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினர் ஆகவில்லை. இதனால் அரசு ஆட்டோ தொழிலாளர்களுக்குக் கொடுத்த நிவாரணமும் இவருக்குக் கிடைக்கவில்லை. ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், ஷாஜியின் கஷ்ட நிலை குறித்து 'இந்து தமிழ் திசை' இணையத்தில் செய்தி வெளியாகி இருந்தது.
இதைப் படித்துவிட்டு ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பினர் நம்மைத் தொடர்பு கொண்டு ஷாஜியின் முகவரி விவரங்களை வாங்கினர். தொடர்ந்து அவரது வீட்டுக்கு நேரில் சென்ற அந்த அமைப்பின் பொறுப்பாளர்கள் அமீர் அப்பாஸ், கபூர்மீம் பிள்ளை, குளச்சல் ஆசீம் ஆகியோர் ஷாஜிக்கு இந்த ஊரடங்கு காலத்துக்குத் தேவையான அரிசி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்டவைகளை வழங்கினர்.
மேலும், அவசரத் தேவை ஏதேனும் இருந்தால் தங்களைத் தொடர்பு கொள்ளுமாறு அலைபேசி எண்ணையும் கொடுத்துச் சென்றனர். 'இந்து தமிழ் திசை' செய்தியின் எதிரொலியாக இன்னும் சில தன்னார்வலர்களும் தொடர்ந்து ஷாஜிக்கு உதவி வருகின்றனர்.