தமிழகத்தில் இன்று புதிதாக 25 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதனால், தமிழகத்தில், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,267 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று (ஏப்.16) மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்திய பிறகு முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது:
"பரிசோதனை எண்ணிக்கைகளை தமிழக அரசு அதிகரித்துள்ளது. அரசு சார்பாக 17 ஆய்வக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தனியார் சார்பாக 10 ஆய்வகங்கள் உள்ளன. மொத்தம் 27 ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வகங்களில் நாளொன்றுக்கு 5,590 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
22 அரசு மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை அளிக்கப்படுகிறது. தனிமைப்படுத்தப்பட்ட வசதிகள் கொண்ட அரசு மருத்துவமனைகளின் எண்ணிக்கை 101. தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கை 154. விருப்பப்பட்டால் தனியார் மருத்துவமனைகளிலும் இதற்கென சிகிச்சை பெறலாம்.
29 ஆயிரத்து 74 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் உள்ளன. 2,521 தீவிர சிகிச்சை படுக்கை பிரிவுகள் உள்ளன. 34 ஆயிரத்து 841 நோயாளிகள் தீவிர தனிமைப்படுத்தலில் உள்ளனர். 74 ஆயிரத்து 326 பேர் தீவிர தனிமைப்படுத்தலை முடித்துள்ளனர்.
17 ஆயிரத்து 835 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 16 ஆயிரத்து 452 பேரின் பரிசோதனை முடிவுகள் பெறப்பட்டுள்ளன. 1,383 பேரின் பரிசோதனை முடிவுகள் வர உள்ளன. நேற்று வரை 1,242 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இன்று இதுவரை 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆக, மொத்தமாக,1,267 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரசு நோய்ப்பரவலை கட்டுப்படுத்தியதால் 25 பேருக்குத்தான் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
1,876 பேர் கரோனா சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் உள்ளனர். ஏற்கெனவே 118 பேர் சிகிச்சை முடிந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இன்று 62 பேர் வீடு திரும்புகின்றனர். மொத்தமாக 180 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
ஏற்கெனவே கரோனாவால் 14 பேர் உயிரிழந்த நிலையில் இன்று மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக, 15 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 558. இந்த பகுதிகளில் உள்ள குடும்பங்களில் பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 லட்சத்து 51 ஆயிரத்து 371.
நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள மருத்துவர் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களின் எண்ணிக்கை 13.இவர்களுள் அரசு மருத்துவர்கள் 6 பேர். தனியார் மருத்துவர்கள் 5 பேர். தூய்மைப்பணியாளர் ஒருவர். சுகாதாரப் பணியாளர் ஒருவர்.
டெல்லியில் இதுவரை 24 மருத்துவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. மும்பையில் மட்டும் 100 மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் 3,300 மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இத்தாலியில்1,000-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சிகிச்சை அளிக்கும் போது பாதிப்பு ஏற்படுவது தமிழகத்தில் மட்டுமல்ல, வளர்ந்த நாடுகளிலும் நடைபெற்றிருக்கிறது. தொற்று பாதிக்கப்பட்ட சுகாதார பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகள், உணவுகள் வழங்கப்பட்டு உயர்தர சிகிச்சை வழங்கப்படுகின்றது"
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.