தமிழகம்

உள்ளே கட்டுப்பாடு; வெளியே கடும் நெரிசல்: கோவை அரசு அலுவலகங்களில் காற்றில் பறக்கும் தனிமனித இடைவெளி

கா.சு.வேலாயுதன்

கரோனா தொற்று ஏற்படாமல் இருக்க ஒவ்வொருவரும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், அரசு அலுவலகங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் போன்ற இடங்களிலேயே தனிமனித இடைவெளியைப் பின்பற்றாமல் மக்கள் அலட்சியமாக நடந்துகொள்வது அதிர்ச்சியளிக்கிறது. கட்டிடங்களுக்கு உள்ளே அதைக் கடைப்பிடித்தாலும், வெளியே நெருக்கடியடித்துக் கொண்டுதான் நிற்கிறார்கள் மக்கள்.

கோவை சின்னியம்பாளையத்தில் இயங்கிவரும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் முன்பு, புத்தாண்டு தினத்தில் காலை 10 மணி முதலே ஏராளமான மக்கள் கூட்டத்தைப் பார்க்க முடிந்தது. பணம் எடுக்க வந்தவர்கள், செலுத்த வந்தவர்கள் என ஒருவருக்கொருவர் முண்டியடித்துக்கொண்டு நின்றிருந்தனர். யாரும் தனிமனித இடைவெளியைப் பேணவில்லை. வங்கிக் கட்டிடத்தின் உள்ளே நான்கைந்து பேர் மட்டும் தனிமனித இடைவெளி விட்டு நின்றிருந்தனர்.

இதைப் பற்றி வங்கி அலுவலர்களிடம் கேட்டபோது, “நாங்கள் வங்கிக்குள் மட்டுமே தனிமனித இடைவெளியைப் பேண முடியும். இங்கே நான்கைந்து பேர் மட்டுமே நிற்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறோம். வெளியே நிற்பவர்களுக்கு நாங்கள் பொறுப்பாளிகள் அல்ல” என்றனர் சலிப்புடன்.

இதேபோல் கோவை சூலூர் பேரூராட்சி அலுவலகம் முன்பும் பெரும் கூட்டத்தைப் பார்க்க முடிந்தது. அலுவலக வளாகத்தில் இலவச உணவுப் பொட்டலங்கள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டி ருந்தது. அவற்றை வாங்குவதற்காக, வளாகத்துக்கு வெளியே பலர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இங்கும் கடும் நெரிசல்தான். வளாகத்துக்குள் தனிமனித இடைவெளியைப் பின்பற்றும் வகையில் போதிய இடைவெளியுடன் அடையாளக் குறி இடப்பட்டிருந்தது. அதைப் பின்பற்றி மக்களும் நின்றுகொண்டிருந்தனர்.

பேரூராட்சி அலுவலக ஊழியர்களிடம் பேசியபோது, “உள்ளே மட்டும்தான் தனிமனித இடைவெளியைப் பின்பற்றுமாறு மக்களிடம் சொல்ல முடியும். வெளியே நிற்பவர்களை போலீஸ்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்றனர்.

கோவை ஆட்சியர் அலுவலத்திலும் இதே நிலைதான். வெளியூர் செல்ல விண்ணப்பிக்க, ஆட்சியர் அலுவலத்துக்கு வந்திருந்தவர்கள், வளாகத்துக்கு வெளியே நெருக்கியடித்து நின்றுகொண்டிருந்தனர். இங்கும் அலுவலக வளாகத்திற்குள்ளே மட்டும் தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இங்கே போதிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. இடைவெளி விட்டு நிற்குமாறு போலீஸாரும் அறிவுறுத்தவே செய்கிறார்கள். ஆனால், யாருமே அதைக் காதில் வாங்கிக்கொள்வதாகத் தெரியவில்லை. இதனால், ஒரு கட்டத்தில் சோர்ந்துபோய் அமைதியாகிவிடுகிறார்கள் போலீஸார்.

இதைப் பற்றி இங்குள்ள போலீஸார் கூறும்போது, “அவரவர் பாதுகாப்பை அவரவரே உறுதி செய்துகொள்ள வேண்டும். முடிந்த வரை மக்களுக்கு எடுத்துக் கூறுகிறோம். பல உயிர்களைப் பலிவாங்கிவரும் இந்த வைரஸ் தொற்றிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள வேண்டும் என்றால், முதலில் மக்கள் அந்த ஆபத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்றனர்.

விழிப்புணர்வு இல்லையென்றால், விபரீத விளைவுகள் ஏற்படும் என்பதை மக்கள்தான் உணர வேண்டும்!

SCROLL FOR NEXT