எதிர்க்கட்சிகளின் அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையற்ற ஒன்று என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஏப்.16) வெளியிட்ட அறிக்கையில், "பிரதமர் நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டிக்க ஆற்றிய உரையிலும், மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளிலும் உள்ள பல்வேறு முக்கிய அம்சங்கள் மக்கள் நலன் காக்கும் வகையில் அமைந்துள்ளன.
அதாவது, பிரதமர் கரோனாவிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டுமென்றால் முதலில் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அறிவுரையும் தேவை, அதனைத் தொடர்ந்து நோயின் தாக்கத்தை படிப்படியாக குறைக்க நெறிமுறைகளும் தேவை என்பதன் அடிப்படையிலேயே தொடர்ந்து உரையாற்றியதோடு, செயல்பாட்டையும் வகுத்துள்ளார்.
எனவே, பிரதமர் அறிவுரை மட்டும் கூறவில்லை நோய்க்கு தீர்வு காண வேண்டும் என்றும், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தக்கூடிய நிலையை வரும் 20 ஆம் தேதியிலிருந்து ஏற்படுத்துவோம் என்றும் கூறியிருந்தார். அதன் அடிப்படையிலேயே நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் பொருளாதார உயர்வுக்கு மட்டுமல்லாமல் வேலைவாய்ப்புக்கு உண்டான துறைகளையும் செயல்படுத்த அறிவித்திருக்கிறது.
அதாவது, விவசாயம், விளைபொருள் கொள்முதல், ஊரக வேலைவாய்ப்பு பணிகள், கட்டுமானப் பணிகள், சிறு, குறு தொழில், கனரக வாகன பழுது பார்க்கும் கடைகள், நெடுஞ்சாலையோர ஓட்டல்கள், தேயிலை ஆலைகள், சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள தொழிற்சாலைகள் போன்றவற்றில் கட்டுப்பாடுகளை விதித்து செயல்பட நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், மத்திய, மாநில அரசுகளுக்கு நாட்டின் உள்ள அனைத்து தரப்பு மக்களும் ஆதரவுக்குரல் கொடுக்க வேண்டும். ஆனால், தமிழக எதிர்க்கட்சிகள் மத்திய, மாநில அரசுகளுக்கு ஆதரவு கொடுக்காமல் மக்களின் நம்பிக்கையை இழக்கச்செய்யக்கூடிய வகையில் செயல்படுவது வருத்தம் அளிக்கிறது.
காரணம், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் ஒருபுறம் ஆதரவு என்று பேச்சளவில் சொல்லிவிட்டு மறுபுறம் காணொலிக் காட்சி மூலம் கூட்டம் நடைபெறும் என்று அறிவித்திருப்பது அரசுக்கு ஆதரவு அளிப்பதற்காக அல்ல அரசியல் ஆதாயம் தேடுவதற்காக.
ஒரு அசாதாரண சூழலில் எதிர்க்கட்சிகளும் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு, முழு ஒத்துழைப்பு கொடுக்க முன்வர வேண்டும். கரோனாவை ஒழிப்பதிலும், மக்கள் சுமையைக் குறைப்பதிலும் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் பங்குண்டு.
அப்படித்தான் எதிர்க்கட்சிகள் நினைக்க வேண்டுமே தவிர இதில் அரசியல் சாயம் பூசவோ, தனி நபர் லாபம் தேடவோ அல்லது மத்திய, மாநில அரசுகளுக்குத்தான் நல்ல பெயர் கிடைக்கும் என்றோ நினைக்க வேண்டாம். குறிப்பாக, தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் காணொலிக் காட்சி மூலம் கூட்டம் நடத்துவது என்பது மக்கள் நலன் சார்ந்ததாக அமையாமல் அரசியல் சாயம் பூசுவதாகவே வெளிப்படும்.
மக்கள் இதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. எனவே, கரோனாவை ஒழிக்கவும், பொருளாதாரத்தை படிப்படியாக உயர்த்தவும் மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல்கள், நெறிமுறைகளைப் பின்பற்றுவோம், முன்னேறுவோம்" என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.