கரோனா ஊரடங்கு காலத்தில் ஆவடியை அடுத்த வெள்ளானுர் கிராம சுகாதாரச் செவிலியரின் மனிதாபமான உதவி பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் கிராமப்புறப் பெண்களுக்கும் தொடர்புப் பாலமாக உள்ளவர்கள் கிராம சுகாதாரச் செவிலியர்கள். தங்களின் கிராமப் பெண்கள் கருவுற்றது முதல் குழந்தைப் பேறு, தடுப்பூசி, தொடர் கவனிப்பு மற்றும் பல தாய் சேய் நலத் திட்டங்களைச் சுகாதாரச் செவிலியர்கள் செயல்படுத்துகின்றனர்.
மேலும் தங்கள் பகுதியில் உள்ள கருவுற்ற பெண்களின் ஊட்டச்சத்து, உணவுமுறை அறிவுரையைக் கூறி , பேறுகாலத்தில் ரத்த சோகை வராமல் பார்த்துக்கொள்வதும் இவர்களது பணியாகும்.
இதற்கிடையே கரோனா ஊரடங்கு காலகட்டத்தில் வெள்ளானுர் கிராம சுகாதாரச் செவிலியரான ஜெயலட்சுமி, தனது கிராமத்தில் உள்ள கருவுற்ற, ஏழைக் குடும்பத்தைச் சார்ந்த பெண்கள் குடும்ப வருமானம் இன்றி, சாப்பாட்டிற்கே வழியில்லாமல் இருப்பதைக் கண்டறிந்தார். தனது கரோனா கணக்கெடுப்பின்போது இதை அறிந்த செவிலியர் ஜெயலட்சுமி, கணவருடன் இணைந்து உதவ முடிவெடுத்தார்.
சென்னை புறநகர்ப் பகுதியான ஆவடியை அடுத்த கொள்ளுமேடு, வெள்ளானுர் மற்றும் கண்ணனியம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு அத்தியாவசியத் தேவைகளான அரிசி, மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகளை வழங்கினார், அத்துடன் கர்ப்பிணிகள் இந்தக் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார். இதையடுத்து கர்ப்பிணிப் பெண்கள், அவருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.
கரோனா காலத்தில் செவிலியர் ஜெயலட்சுமியின் மனிதாபிமான செயல், அனைத்துத் தரப்பிலும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.