செம்மரம் கடத்தியதாகக் கூறி ஆந்திர போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களின் மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக நல இயக்கங்கள், மனித உரிமை ஆர்வலர்கள் இணைந்து நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஜவாஹிருல்லாஹ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
உண்ணாவிரதப் பந்தலில் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, “ஆந்திராவில் பொய் குற்றச்சாட்டின் பேரில் 20 அப்பாவி தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த வழக்கை விசாரிக்க ஆந்திர அரசு என்கவுன்ட்டர் செய்வதில் புகழ் பெற்ற ஒரு போலீஸ் அதிகாரியை தலைவராக நியமித்துள்ளது. இதிலிருந்தே இந்த வழக்கில் நியாயம் கிடைக்காது என்பதை ஊகிக்க முடியும். தமிழகத்திலிருந்து 20 தொழிலாளர்கள் கடத்திச் செல்லப்பட்டதால் தமிழக போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து வழக்கை விசாரிக்க வேண்டும் அல்லது மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். நிரந்தர அரசு வேலை வழங்க வேண்டும். பிரதமர் மோடியை நான் சந்தித்தபோது இதுகுறித்து எடுத்துச் சொன்னேன். அவரும் இது திட்டமிட்ட படுகொலை என்று தெரிவித்தார். ஆனால், இதுவரை சிபிஐ விசாரணைக்குக் கூட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மத்திய, மாநில அரசுகளுக்கு அடித்தட்டு நிலையில் உள்ள தமிழர்களின் நலனில் அக்கறையில்லையோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் முக்கிய சாட்சிகளான 3 பேருக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வரையில் போராட்டங்கள் தொடரும்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் செப்டம்பர் 8-ல் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். சாதி, மத, இன வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள், மனித உரிமை ஆர்வலர்கள் நியாயம் கேட்டு இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்” என்றார்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்ட 20 தமிழர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.