சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டுவது தொடர்பாக சட்டப்பேரவையில் சமக தலைவர் சரத்குமார் கூறிய கருத்துக்கு திமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது துணைக் கேள்வி எழுப்பிய சரத்குமார், ‘‘நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மணிமண்டபத்தில் சிவாஜி கணேசனுக்கு சிலை அமைக்க வேண்டும். அதை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைக்க வேண்டும். சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டுவதாக கடந்த 2006-ல் ஆட்சிக்கு வந்த திமுக அறிவித்தது. ஆனால், அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை’’ என்றார்.
அப்போது, எஸ்.எஸ்.சிவசங்கர் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள், சரத்குமார் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சரத்குமாரை நோக்கி கோஷமிட்டனர். இதனால் பேரவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
‘‘முதல்வரை பாராட்டி பேசுவதை தவறு என்று கூற முடியாது’’ என கூறிய பேரவைத் தலைவர், திமுக உறுப்பினர்கள் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
அப்போது பேரவைக்குள் வந்த திமுக துணைத் தலைவர் துரைமுருகன், ‘‘கேள்வி நேரத்தின்போது யார் மீதும் குற்றம்சாட்டக் கூடாது என்ற விதி உள்ளது. ஆனால், சரத்குமார் திமுக மீது குற்றம்சாட்டுகிறார். அவர் கூறியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்’’ என்றார்.
நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறுக்கிட்டு, ‘‘திமுக உறுப்பினர்கள் அமைதி காக்க வேண்டும். சரத்குமார் மூலக் கேள்விக்கு தொடர்புடைய துணைக் கேள்வியை கேட்பார்’’ என்றார்.
தொடர்ந்து பேசிய சரத்குமார், ‘‘சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டுவோம் என 2006 தேர்தல் அறிக்கையில் திமுக கூறியிருந்தது. அதைத்தான் சுட்டிக் காட்டினேன்’’ என்றார்.