கரோனா அச்சுறுத்தல் சூழலில் நீட் போன்ற தேர்வை மாணவர்களால் நிச்சயமாக எழுத இயலாது. எனவே, மத்திய அரசு தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது மிக மிக அவசியமானது என தமாகா இளைஞரணியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா தலைமையில் இளைஞரணியின் 12-வது செயற்குழு கூட்டம் இன்று காணொலிக் காட்சி வழியாக (ஜூம் செயலி மூலமாக) நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தீர்மானம் 1:
உலகை அச்சுறுத்தும் கரோனா வைரஸ் கொடிய நோயால், பெரும் பாதிப்பு ஏற்படாத வகையில், இந்திய அரசும் தமிழக அரசும் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பெரும் பாராட்டுக்குரியவை ஆகும். தொடர்ந்து, மருத்துவ சிகிச்சை முறைகள், ஊரடங்குச் சட்டம் முடிவுக்கு வந்தாலும் , இந்தியாவிலும் தமிழகத்திலும் இந்த ஆண்டு இறுதிவரையில் தொடர் கண்காணிப்பில் இருக்க, மத்திய ,மாநில அரசுகள் நடவடிக்கைகள் மேற்கொள்ள தமாகா இளைஞரணியின் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 2:
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பெரும் பொருளாதாரத் தேக்க நிலை ஏற்படும் என பொதுமக்களிடையே அச்சம் உள்ளது. இயல்பு நிலை திரும்பும் வரையில் விவசாயிகள், தொழிலாளர்கள், அன்றாடத் தேவைகளுக்கு உழைக்கும் அமைப்பு சாரா தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், டாக்ஸி ஓட்டுநர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டுமென இச்செயற்குழு வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 3:
கரோனா வைரஸ் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் பெரும் பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தமாகா இளைஞரணி தலைவணங்கி நன்றியை உரித்தாக்குகிறது.
தீர்மானம் 4:
தமிழக அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், அறிவித்துள்ள ஒருமாத சிறப்பு ஊதிய அறிவிப்பினை தமாகா இளைஞரணி செயற்குழு வரவேற்கிறது. அதே ஒரு மாத சிறப்பு ஊதியம் வழங்கும் சலுகையினை அரசு தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள் , வருவாய்த் துறையினருக்கு வழங்க வேண்டுமென தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 5:
தமிழக அரசு மத்திய அரசிடம் கோரியுள்ள ரூபாய் 9,000 கோடி நிவாரணத் தொகையை உடனடியாக வழங்கிட மத்திய அரசை இச்செயற்குழு வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது. மருத்துவ சிகிச்சை வழங்குவதற்காக தமிழக அரசு கேட்டுள்ள ரூ.3000 கோடி நிவாரணத் தொகையை மத்திய அரசு காலதாமதமின்றி உடனடியாக வழங்கிட இச்செயற்குழு வற்புறுத்துகிறது.
தீர்மானம் 6:
தமிழகத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் மற்றும் அச்சம் போக்குதல் உள்ளிட்ட பணிகளை தமிழகம் முழுவதும் தமாகா இளைஞர் அணி மேற்கொள்வது என தீர்மானிக்கிறது .மேலும், கபசுரக் குடிநீர் உள்ளிட்ட மருத்துவப் பொருட்கள், உணவு வேண்டுவோர், நிவாரணம் வேண்டுவோருக்கு தமிழகம் முழுவதும் தமாகா இளைஞர் அணி உதவி செய்வது, நிவாரணப் பொருட்கள் வழங்குவது எனத் தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 7:
கரோனா அச்சுறுத்தல் சூழலில் நீட் போன்ற தேர்வுகள் எழுத மாணவ மாணவியருக்கு நிச்சயமாக இயலாது. எனவே, மத்திய அரசு தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது மிக மிக அவசியமானது என மத்திய அரசை இச்செயற்குழு வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது .
தீர்மானம் 8:
தமிழக அரசின் கரோனா நிவாரணத்திற்கு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தன்னுடைய சொந்தப் பணத்திலிருந்து ரூபாய் 10 லட்சம் நிதி வழங்கியதற்கு இளைஞரணி சார்பாக எங்களுடைய மனமார்ந்த பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம் .
தீர்மானம் 9:
மத்திய அரசு இன்று அனைவரும், கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும் என்று ஒரு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது . எனவே தமாகா இளைஞர் அணி, மத்திய அரசும், மாநில அரசும் பொதுமக்களுக்கு இலவசமாக முகக் கவசம் வழங்க வேண்டும் என்று இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தபடுகிறது.
தீர்மானம் 10:
ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதத்திற்கான மின்சாரக் கட்டணம் முழுவதுமாக ரத்து செய்யப்பட வேண்டும் என்று இக்கூட்டம் மாநில அரசை வலியுறுத்துகிறது.
தமாகா இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.