தன்னம்பிக்கையும் மூச்சுப் பயிற்சியும் கரோனாவிலிருந்து மீண்டு வர முக்கியமானவை என்றார் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த முதியவர் குருசாமி.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் குருசாமி (62). கரோனாவால் பாதிக்கப்பட்டு மதுரையில் சிகிச்சைபெற்று வந்த குருசாமி அண்மையில் குணமடைந்து மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார்.
தான் மீண்டுவந்த அனுபவம் குறித்து முதியவர் குருசாமி கூறுகையில்,
மார்ச் 18ம் தேதி முதல் காய்ச்சல் இருந்தது. மாத்திரை சாப்பிட்டேன். காய்ச்சல் குறையவில்லை.
ராஜபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் எக்ஸ்ரே, ரத்த பரிசோசதனை செய்தபோது எந்த அறிரிகுறியும் தெரியவில்லை. ஆனால், காய்ச்சல் மட்டும் தொடர்ந்து அதிகமாக இருந்தது. 104 டிகிரி வரை காய்ச்சல் இருந்தது. சிடி ஸ்கேன் எடுத்து பார்த்தபோது நுரையீரலில் அடைப்பு இருந்தது தெரியவந்தது. இதனால் கரோனா இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது.
அதையடுத்து, மதுரை அரசு மருத்துவமனைக்கு மார்ச் 27ம் தேதி அனுப்பிவைத்தனர். அப்போது, அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து 3 நாள் சிகிச்சைக்குப் பிறகு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து 13 நாள் சிகிச்சை பெற்றேன். கடந்த 10ம் தேதி பரிசோதனையில் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று தெரிந்தது. அதன்பின் பூரண குணமடைந்து வீடு திரும்பினேன்.
காய்ச்சல் இருந்தால் அதை சாராதணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. கரோனா வைரஸ் பாதித்ததால் நுறையீரல் பாதிப்பு அதிகம் ஏற்பட்டது. தன்னம்பிக்கையுடன் இருந்ததால் பாதிப்பு தெரியவில்லை.
நோய் பாதித்தால் மனம் தளராமல் தன்னம்பிக்கையுடன் இருந்தால் நோயிலிருந்து வெளிவரலாம். அதோடு, மூச்சுப் பயிற்சியும் யோகாசனமும் மருத்துவர்கள் ஆலோசனைப்படி செய்ததால் விரைவில் குணமடைய வாய்ப்பு ஏற்பட்டது.
குடும்பத்தினரும் நண்பர்களும் தொலைபேசி மூலம் ஊக்கம் அளித்தனர். கரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள ஒவ்வொருவரும் சமுதாய இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மருத்துவர்கள் கூறுவதையும், அரசு வழிகாட்டுதல்களையும் கடைபிடிக்க வேண்டும். நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்புவதுடன் வரும்முன் காப்பதே நல்லது என்றார்.