தமிழகம்

கேரளாவிற்கு கேன்சர் நோய் சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகளைக் காவல்துறை அனுமதிக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

எல்.மோகன்

குமரி மாவட்டத்தில் இருந்து கேன்சர் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சைக்காக திருவனந்தபுரத்திற்கு செல்லும் நோயாளிகளைக் காவல் துறையினர் அனுமதிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குமரி மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

கோவிட் 19 தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 3 ம் தேதி வரை ஊரடங்கு நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் இருந்து கேன்சர் உட்பட பல்வேறு தீவிர நோய்களுக்கு சிகிச்சைக்காக அருகில் உள்ள கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி, சித்திரை திருநாள் மருத்துவமனை, ரீஜினல் கேன்சர் சென்டர் உள்ளிட்ட மருத்துவமனைக்கு குமரி மாவட்ட நோயாளிகள் சென்று வருகின்றனர்.

நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் தற்போது இந்த மருத்துவமனைகளுக்கு குமரி மாவட்டத்தில் இருந்து செல்லும் போது பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.

குறிப்பாக மருத்துவ தேவைகளுக்கு செல்ல மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து பலருக்கு அனுமதி கடிதம் கிடைக்காத நிலை உள்ளது. அனுமதி கிடைக்காத நிலையில் அவர்கள் தங்கள் அவசர சிகிச்சைக்காக திருவனந்தபுரத்திற்கு செல்லும் போது களியக்காவிளை எல்லைப்பகுதியில் தமிழக காவல் துறையினரின் கெடுபிடிகளாலும், மேற்கொண்டு செல்ல அனுமதிக்கப்படாமலும் துன்பத்திற்கு ஆளாகின்றனர்.

உரிய நேரத்தில் கிடைக்க வேண்டிய சிகிச்சை பெறமுடியாத நிலை குமரி மாவட்டத்தில் உள்ள பல நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம், குமரி மாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகளைக் களியக்காவிளை, கொல்லங்கோடு உள்ளிட்ட எல்லைப்பகுதிகளில் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் செல்ல காவல் துறையினர் அனுமதிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT