தமிழகம்

புளியங்குடியில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

த.அசோக் குமார்

கரோனா வைரஸ் தொற்று இருப்பதால் தென்காசி மாவட்டம் புளியங்குடியில் ஒருசில பகுதிகளை மட்டும் தனிமைப்படுத்தியுள்ளதால் அங்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தென்காசி மாவட்டத் தலைவர் ஜமாலுதீன், தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது:

புளியங்குடியில் சில நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பதால் அந்தப் பகுதிகள் மட்டும் பொதுமக்கள் வெளியில் வராத வகையில் முழுமையாக அடைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் இன்னும் சில பகுதிகள் முழுமையாக அடைக்கப்படாத நிலை உள்ளது. சில தெருக்கள் மட்டும் முழுமையாக அடைக்கப்பட்டு சில தெருக்கள் அடைக்கப்படாமல் இருப்பதால் நோய்த் தொற்று பரவுவதை எப்படி தடுக்க முடியும் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும், முழுமையாக அடைக்கப்பட்ட பகுதிகளில் அன்றாட தேவைகளுக்காக உணவு, பால் போன்ற பொருட்கள் கூட வாங்க இயலாத நிலையில் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

மேலும், டயாலிசிஸ் செய்யக்கூடிய நோயாளிகள், கர்ப்பிணிp பெண்கள் தொடர் மருத்துவம் பார்க்க இயலாத நிலையில் மிகவும் அவதிப்படுகிறார்கள்.

பொதுமக்களின் அத்யாவசிய மற்றும் அவசரத் தேவைகளுக்கு வெளியூர்களுக்கு பயணம் செய்ய ஆன்லைனின் பயண அனுமதிச் சீட்டு பெறலாம் என்று அரசு அறிவித்திருந்தது.

ஆனால், இதில் பதிவு செய்து 10 நாட்களாகியும் சிலருக்கு எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.

இ- பாஸ் கிடைக்காமல் அவசர மருத்துவத்துக்காக பொதுமக்கள் வெளியே வரும்போது காவல்துறையினர் மனிதாபிமானத்தோடு நடக்காமல் தகாத வார்த்தைகளால் பொதுமக்களை திட்டி கேவலப்படுத்துகின்றனர். இதனால் நோயாளிகள் மருத்துவமும் கிடைக்காமல் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.

நோய்த் தொற்றைத் தடுப்பதற்க்கு அரசு முயற்சி எடுப்பதை மனதார வரவேற்கிறோம். அரசு தரப்பின் நிலையை மக்களுக்கு எடுத்துச் சொல்லி கடுமை காட்டாமல் அவர்களின் அவசர தேவைகளுக்கு அரசு வழி ஏற்படுத்த வேண்டும்.

அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் சிரம்பப்படுவதை கவனத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT