ஊரடங்கு நேரத்தில் விவசாயப் பணிகளுக்கு தடைகளைத் தளர்த்தியதால் குமரியில் அழியும் நிலையில் இருந்த 300 ஏக்கர் நெற்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டது. இந்த நெல்லிற்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த கும்பப்பூ சாகுபடி நெல் பயிர்கள் இறுதிகட்ட அறுவடை பணியின்போது கரோனா பாதிப்பால் ஊரடங்கு அமலுக்கு வந்தது.
இதனால் தேரூர், தோவாளை, திருப்பதிசாரம், இரணியல் பகுதியில் அறுவடை ஆகாத நிலையில் இறுதிகட்ட பயிர்கள் வயல்களிலே நெல் மணிகளுடன் சாய்ந்தன.
சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதிமுறைகளால் விவசாயத் தொழிலாளர்கள் பணிக்கு செல்ல முடியவில்லை. நெல் மணிகள் வயல்களிலே உதிர்வதைப் பார்த்த விவசாயிகள் பலர் தனி ஆளாக நின்று சிறிது சிறிதாக முடிந்தவரை நெற்பயிரை அறுவடை செய்து கரையேற்றினர்.
ஆனாலும் 300 ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் வயில்களிலே தேக்கமடைந்தன. மேலும் குமரியில் அவ்வப்போது பரவலாக பெய்த சாரல் மழையால் நெற்பயிர்களில் தண்ணீர் தேங்கி முளைக்க தொடங்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
இதனால் விவசாயிகள் குமரி மாவட்ட ஆட்சியரிடம் வயல்களில் தேங்கிய நெல்லை அறுவடை செய்வதற்கு இயந்திரங்களை அனுமதிக்கவும், அறுவடை செய்த நெல்லை வாகனங்களில் கொண்டு செல்லவும், அவற்றை கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யவும் அனுமதி கேட்டனர்.
இதை ஏற்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே குமரியில் விவசாய பொருட்களை வாகனங்களில் கொண்டு செல்லவும், விவசாய பணிகளுக்காக டிராக்டர், மற்றும் பிற வாகனங்களை கொண்ட பிற வாகனங்களை கொண்டு செல்வதற்கான தடையை விடுவித்தார்.
மேலும் விவசாய பணிகளுக்கான வாகனங்களுக்கு ஊரடங்கு தொடர்பான அனுமதி அவசியமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் குமரி மாவட்டத்தில் வயல்களிலே தேக்கமடைந்த விளைந்த நெற்பயிர்கள் கடந்த 5 நாட்களில் அறுவடை செய்யப்பட்டது.
மேலும் அறுவடை செய்யப்பட்ட நெல்கள் அனைத்தும் கொள்முதல் நிலையங்கள் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இவற்றிற்கு சாதாரண நாட்களை விட நல்ல விலையும் கிடைத்துள்ளது.
இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து முன்னோடி விவசாயி செண்பகசேகர பிள்ளை கூறுகையில்; ஊரடங்கிற்கு மத்தியில் மாவட்ட ஆட்சியர் விவசாயிகளிடம் செல்பேசி செயலி மூலம் கலந்துரையாடினார்.
அப்போது இறுதி கட்டமாக அறுவடை ஆகாமல் 300 ஏக்கர் நெற்பயிர்கள் இருப்பது குறித்து கூறினோம். இதைத்தொடர்ந்து அவை அறுவடை செய்வதற்கு விவசாய பணிகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தினார்.
மேலும் திட்டுவிளை, செண்பகராமன்புதூர், திங்கள்நகர், தாழக்குடி, நாகர்கோவில் போன்ற பகுதிகளில் அரசின் நேரடி கொள்முதல் நிலையம் மூலம் நெல்கள் கொள்முதல் செய்யப்பட்டன. கிலோ ரூ.18.65 என்ற விலையில் கொள்முதல் செய்யப்பட்டதால் குமரி மாவட்டத்தில் ஒரு கோட்டை அளவு நெல் 1600க்கு மேல் விற்பனை ஆனது.
இதனால் ஊரடங்கு நேரத்தில் செலவிற்கு பணமின்றி தவித்த விவசாயிகளுக்கு நெல் வருவாய் ஓரளவு கைகொடுத்துள்ளது. அடுத்த கன்னிப்பூ சாகுபடி பணி ஜீன் மாதம் தொடங்கும். இதற்கான நாற்றங்கால் விதைப்பு இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்க உள்ளோம் என்றார்.