தொழிலாளர் வருங்கால வைப்புநிதி திட்ட (இ.பி.எஃப்.) கூடுதல் மத்திய பெருமண்டல ஆணையர் மூ.மதியழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரோனா வைரஸால் ஏற்படும் நெருக்கடிகளை சமாளிப்பதற்காக மத்திய அரசு பிரதம மந்திரியின் ஏழைகள் நலத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
குறைவான சம்பளம் பெறும் தொழிலாளிகளின் இடையூறுகளை நீக்குவது மற்றும் 100 பேருக்கு குறைவாக பி.எஃப். செலுத்தும் நிறுவனங்களுக்கு ஆதரவு தருவதே இத்திட்டத்தின் நோக்கம்.
இதன்படி, வைப்பு நிதியில் செலுத்தவேண்டிய ஊழியர்களின் பங்கு மற்றும் நிறுவனத்தின் பங்கு ஆகிய இரண்டையும் சேர்த்து, 24 சதவீதம் தொகையை மத்திய அரசு வருங்கால வைப்புநிதி செலுத்தும் சந்தாதாரர்களுக்கு, அவர்களது வைப்பு நிதி கணக்கில் 3 மாதங்களுக்கு (மார்ச் 2020 முதல் மே 2020 வரை) வரவு வைக்கத் திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்தில் பயனடைய, பி.எஃப். செலுத்தும் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளிக்கு பி.எஃப். தொகை பிடிக்கப்பட்டு, அவரது யு.ஏ.என்.-ல் கே.ஒய்.சி. பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். மேலும், நிறுவனத்தில் 100 பேருக்கு குறைவான பணியாளர்கள் இருக்க வேண்டும். மொத்த பணியாளர்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு சம்பளம் ரூ.15000-க்கு குறைவாக இருக்க வேண்டும்.
தகுதியான தொழிலாளர்களை இந்த திட்டம் சென்றடைவதற்காக, தொழிலதிபர்களின் உள்நுழையும் பக்கத்தில் (login-ல்) இ.சி.ஆர். வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தைப் பெற தகுதியுடைய தொழிலாளிகளை கொண்ட தொழிலதிபர்கள் அனைத்து தொழிலாளர்களுக்கும் மாத சம்பளத்தைக் கொடுத்து, அதற்கான சான்றிதழ் மற்றும் உறுதி ஆவணத்தை அப்லோட் செய்ய வேண்டும்.
இதையடுத்து, தொழிலதிபர் மற்றும் தொழிலாளர்களின் தகுதியை சரிபார்த்து, சலானில் மத்திய அரசின் உதவி தொகையான தொழிலாளர் மற்றும் தொழிலதிபரின் சந்தா தொகை தனியாக காண்பிக்கப்படும். மேலும், தொழிலதிபர் செலுத்த வேண்டிய தொகையும் தனியாக காண்பிக்கப்படும்.
சலானில் உள்ளபடி தொழிலதிபர் செலுத்த வேண்டிய சந்தா தொகையை அவர் செலுத்தியவுடன், தகுதியுடைய தொழிலாளிகளுக்கு இ.பி.எஃப். மற்றும் இ.பி.எஸ். சந்தா தொகை நேரடியாக அவரவருடைய யு.ஏ.என்.-ல் மத்திய அரசு வரவு வைக்கும்.
இந்த திட்டம் சம்பந்தமான விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு இ.பி.எஃப்.ஓ. முகப்பு பக்கத்தில் (www.epfindia.gov.in ) "COVID -19" என்ற தலைப்பில் விளக்கமாக பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
தேசிய அளவில் 79 லட்சம் பி.எஃப். உறுப்பினர்கள் பயனடைவர். மூன்று மாதங்களுக்கு 3.8 லட்சம் தொழிலதிபர்கள் பயனடைவர். மொத்தம் 3 மாதத்துக்கு ரூ.4,800 கோடி மத்திய அரசால் வழங்கப்படும். தமிழகத்தில் சென்னை நீங்கலாக, 24 லட்சம் பி.எஃப். உறுப்பினர்கள் மற்றும் 71 ஆயிரம் தொழிலதிபர்கள் பயனடைவர். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.