சிலை திருட்டு வழக்கில் பெண் பத்திரிகையாளர் மாலதி நேற்று கைது செய்யப்பட்டார். மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில் அவர் 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஸ்ரீபெரும்புதூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 3 கோயில்களில் விலை மதிப்புள்ள பழங்கால ஐம்பொன் சிலைகள் கடந்த ஜனவரி மாதம் திருடப்பட்டன. இதுதொடர்பாக சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். சென்னை மாம்பலம் அருகே திரைப்பட நிறுவன தயாரிப்பு மேலாளர் தனலிங்கம், அவரது நண்பர் கருணாகரன் ஆகியோரை மே மாதம் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய பிரபல திரைப்பட இயக்குநர் வி.சேகர் கடந்த 12-ம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக மாலதி என்ற பத்திரிகையாளரை சிலை கடத்தல் தடுப்பு போலீஸார் நேற்று கைது செய்தனர். அவரை சென்னைப் பெருநகர 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில், 15 நாள் நீதிமன்றக் காவலில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
போலீஸிடம் தப்பியவர்
கைதாகியுள்ள பெண் நிருபர் மாலதி, சிலை திருட்டு வழக் கில் ஏற்கெனவே கைது செய்யப் பட்ட கருணாகரனின் சகோதரி. கடந்த ஜனவரி மாதம் திருவண்ணா மலையில் உள்ள 2 கோயில்களில் திருடப்பட்ட சிலைகளை காரில் எடுத்துக்கொண்டு சென்னை நோக்கி வந்துள்ளனர். அந்த காரில் மாலதியும் இருந்தார். வந்தவாசி அருகே வந்தபோது, காரை ரோந்து போலீஸார் வழிமறித்துள்ளனர். தன் அடையாள அட்டையை போலீஸிடம் காண்பித்த மாலதி, ‘‘நான் மாத இதழ் நிருபர். திருவண்ணாமலையில் ஒரு கூட்டத்துக்கு சென்று விட்டு சென்னை திரும்பிக்கொண் டிருக்கிறேன்’’ என்று கூறியுள் ளார். இதை நம்பிய போலீஸார், மேற்கொண்டு காரை சோதனை யிடாமல் அனுப்பியுள்ளனர்.
சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் முன்பு மாலதி கடந்த ஜூலை 23-ம் தேதி அளித்த ரகசிய வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் திரைப்பட இயக்குநர் வி.சேகர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 10 பேரை கைது செய்யும் நடவடிக்கையில் சிலை கடத்தல் தடுப்பு போலீஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.