வீடுகளில் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பு. 
தமிழகம்

நிதி வழங்காததால் புதுச்சேரியில் எதிர்ப்பு: மத்திய அரசைக் கண்டித்து வீடுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டம்

அ.முன்னடியான்

புதுச்சேரி மாநிலத்துக்கு மத்திய அரசு நிதி அளிக்காததைக் கண்டித்து அரியாங்குப்பத்தில் கரோனா வைரஸ் தொற்று பாதித்த பகுதிகளில் உள்ள வீடுகளில் கருப்புக் கொடி கட்டி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி அரியாங்குப்பம் சொர்ணா நகரில் 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் அவர்கள் வசித்து வந்த சொர்ணா நகர் மற்றவர்கள் நுழைய முடியாதபடி சீல் வைக்கப்பட்டது.

அதேபோல் அரியாங்குப்பம் கொம்யூன் மேற்கு பஞ்சாயத்து முழுவதும் முக்கிய சாலைகள் மூடப்பட்டு மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டது. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த யாரும் வெளியே வர முடியாதபடி அனைத்து இணைப்பு சாலைகளும் மூடப்பட்டுள்ளன. இதையொட்டி அந்தப் பகுதி மக்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று (ஏப்.14) கரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் சீல் வைக்கப்பட்டுள்ள அரியாங்குப்பம் கொம்யூன் மேற்கு பஞ்சாயத்துக்குட்பட்ட கோட்டைமேடு, சிவகாமி நகர், எம்ஜிஆர் நகர் ஆகிய பகுதிகளில் பெரியார் சிந்தைனையாளர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசு, புதுச்சேரி மாநிலத்துக்கு நிதி அளிக்காததைக் கண்டித்து அங்குள்ள வீடுகள், மரங்கள், மின்கம்பங்களில் கருப்புக் கொடி கட்டி திடீரென எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், மத்திய அரசு புதுச்சேரிக்கு உடனடியாக நிதி வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த அரியாங்குப்பம் உதவி ஆய்வாளர் புருஷோத்தமன் தலைமையிலான போலீஸார் சீல் வைக்கப்பட்ட பகுதிக்குள் சென்று, அங்கு வீடுகள், மரங்கள், மின்கம்பங்களில் கட்டப்பட்டிருந்த கருப்புக் கொடியை அவிழ்த்து பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். மேலும் அங்கு மக்கள் கூடக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

"ஊரடங்கு உத்தரவால் மாநிலத்தில் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசும் நிதி வழங்கவில்லை. எனவே கரோனாவுக்கான மருத்துவ உபகரணங்கள் வாங்கவும், நிவாரணமாகவும் புதுச்சேரி மாநிலத்துக்கு மத்திய அரசு ரூ.995 கோடி நிதி வழங்க வேண்டும். அனைத்து மாநிலத்தையும் போல புதுச்சேரிக்கு நிதி கொடுக்க வேண்டும்" எனக் கோரி முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து கடிதம் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் பிரதமரிடம் வலியுறுத்தி வருகிறார்.

ஆனால், மத்திய அரசிடமிருந்து நிதி தொடர்பாக இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT