கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த 96 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கரோனா தொற்று பாதிப்புள்ள 40 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமான 9 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிறப்பு மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டதால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் இல்லாத திண்டுக்கல் மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த கரோனா தொற்று உறுதியானவர்கள் கடந்த 4-ம் தேதி முதல் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு சிகிச்சை அளிக்க புதுக்கோட்டை, திண்டுக்கல், நாமக்கல் மாவட்டங்களிலிருந்து 12 மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் பேகம்பூரைச் சேர்ந்த இளைஞர் டெல்லி சென்று திரும்பிய நிலையில் கரோனா தொற்று உறுதியாகி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், 96 வயதான அவரது தாத்தாவுக்கும் கரோனா தொற்று உறுதியானதை அடுத்து கடந்த 9-ம் தேதி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
திண்டுக்கல், நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 101 பேர் கரூரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 96 வயது முதியவர் கடந்த இரு நாட்களாக மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (ஏப்.14) காலை உயிரிழந்தார். அவரது பேரன் தொடர்ந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.