சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு முட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் அம்மா உணவகங்கள் ஆகியவற்றுக்காக, தமிழ் நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளர்கள் மார்க் கெட்டிங் சொசைட்டி சார்பில் 3 லட்சம் முட்டைகள் சேலம் ஆட்சியர் ராமனிடம் நேற்று வழங்கப்பட்டன. இதுகுறித்து ஆட்சியர் ராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகளில் 24 மணி நேரமும் முழுமூச்சாக ஈடுபட்டு வரும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஆகியவற்றின் ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் மருத்துவத்துறை, காவல்துறை உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் ஆரோக்கியத்தை மேம் படுத்தவும், அனைத்து அம்மா உணவகங்களுக்காகவும், நாமக்கல் தமிழ்நாடு முட்டை கோழிப் பண்ணை யாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி மூலமாக 3 லட்சம் முட்டைகள் பெறப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டத்தில் தற்போது வரை 18 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், எம்எல்ஏ., வெங்கடாசலம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அருள் ஜோதிஅரசன், மாநகராட்சி ஆணையர் சதீஷ், தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர்கள் மார்கெட்டிங் சொசைட்டி தலைவர் சுப்ரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் நாமக்கல்லைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் ஏ.பார்த்திபன் கூறுகையில், ‘கரோனா தொற்றினைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், தங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்வது அவசியம். குறிப்பாக, அவர்கள் நாள்தோறும் இரு முட்டைகள் வீதம் உட்கொள்வது ஆரோக்கியமானதாக அமையும். முட்டையின் வெள்ளைக் கருவில் அதிகளவிலான புரோட்டீன் உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிக்கச் செய்யும். எனவே, ஆபத்து மிகுந்த கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுபவர்கள் முட்டையை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்’ என்றார்.