தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணியில் ஈடுபட் டுள்ள தமிழ்நாடு ஊர்க்காவல் படையினருக்கு மருத்துவக் காப்பீடு மற்றும் ஊக்கத் தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாடு ஊர்க்காவல் படை யினர் மாநிலம் முழுவதும் நடை பெறும் பொதுக்கூட்டங்கள், ரோந் துப்பணி, தேர்தல் உள்ளிட்ட பல் வேறு பாதுகாப்பு தொடர்பான பணி களில் போலீஸாருடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் மார்ச் 24-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கை கண்காணிக்கும் வகையில் பாதுகாப்பு பணி, ரோந்துப் பணி, வாகனச் சோதனை உள் ளிட்ட பணிகளில் போலீஸார் ஈடு பட்டு வருகின்றனர். இந்தப் பணி களில் போலீஸாருடன் இணைந்து தமிழ்நாடு ஊர்க்காவல் படை யினரும் ஈடுபட்டு வருகின்றனர்.
கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறையினர், போலீஸாருக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், ஊர்க்காவல் படையி னருக்கு எவ்வித சலுகைகள், பணப் பலன்கள் இதுவரை அறி விக்கப்படவில்லை. எனவே, தங்களுக்கும் அரசு ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என ஊர்க்காவல் படையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஊர்க்காவல்படை வீரர்கள் கூறியது: தமிழக அரசு ஊர்க்காவல் படையினருக்கு நாளொன்றுக்கு 8 மணி நேரப் பணிக்கு ரூ.560 வீதம் மாதத்துக்கு 5 நாட்கள் பணிக்கு ரூ.2,800 மட்டுமே வழங்குகிறது. தமிழகத்தில் உள்ள 16,500 ஊர்க்காவல் படையினரில் பெரும்பாலானோர் வேறு வேலை வாய்ப்பு இல்லாதவர்கள்.
கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் ஏப்.1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை ஊர்க்காவல் படையினரை முழுஅளவில் போலீஸாருடன் இணைந்து பணியாற்ற பணிக்குமாறு மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு தமிழக காவல்துறை இயக்குநர் கடிதம் அனுப்பியுள்ளார். ஆனால், மார்ச் 24-ம் தேதியிலிருந்தே கரோனோ வைரஸ் பரவல் தடுப் புப் பணியில் ஈடுபட்டு வருகி றோம்.
எனவே, சிறப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறை யினர், போலீஸாருக்கு வழங்கப் படுவதுபோல எங்களுக்கும் தமிழக அரசு ஊக்கத்தொகை மற்றும் தினசரி உணவு மற்றும் எரிபொருள் படியை வழங்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து ஊர்க்காவல் படை மண்டல அலுவலர் ஒரு வர் கூறும்போது, “தமிழ்நாடு ஊர்க்காவல் படை சட்டப் பிரிவு 6-ன் கீழ் ஊர்க்காவல் படையினரை கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் ஈடுபடுத்துமாறு டிஜிபி கடிதம் அனுப்பியுள்ளார். அதனால், பணியில் ஈடுபட்டுள்ள ஊர்க்காவல் படையினருக்கு உரிய ஊக்கத்தொகை ஓரிரு மாதங்களில் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது” என்றார்.