தமிழகம்

நாட்டு மக்களின் பசி தீர்க்க 65,000 கோடி ரூபாயை பிரதமர் ஒதுக்குவாரா?- ப.சிதம்பரம் கேள்வி

செய்திப்பிரிவு

பிரதமர் மோடியின் உரையை ஆவலோடு எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், நாட்டு மக்கள் பசி போக்க ரூ.65 ஆயிரம் கோடியைத் தருவாரா? இல்லையா? என்பதே இப்போதுள்ள கேள்வி என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழக காங்கிரஸின் மூத்த தலைவர், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பொருளாதாரம் குறித்து பாஜக அரசுக்குப் பல ஆலோசனைகளை வழங்கி வருகிறார். கரோனா நோய்த்தொற்று இந்தியாவில் பரவ ஆரம்பித்தவுடன் உடனடியாக நாடு முழுவதும் ஊரடங்கை வலியுறுத்திய தலைவர்களில் சிதம்பரமும் ஒருவர்.

ஊரடங்கு நேரத்தில் இரண்டு முறை பேசிய பிரதமர் கைதட்டவும், விளக்கேற்றவும் சொல்வதா? உங்களிடம் நாட்டு மக்கள் நம்பிக்கையான அறிவிப்புகளை எதிர்பார்க்கிறார்கள் என ப.சிதம்பரம் விமர்சித்தார்.

நாளை காலை பிரதமர் உரையாற்ற உள்ளது குறித்தும் ட்விட்டரில் ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.

“நாளை காலை பிரதமர் மோடி ஆற்றவிருக்கும் உரையை உங்களைப் போல நானும் ஆவலுடனும் கவலையுடனும் எதிர்பார்க்கிறேன். ஊரடங்கை ஏப்ரல் 30 வரை நீடிப்பதைத் தவிர்க்க முடியாது என்று தோன்றுகிறது.

ஊரடங்கு நீடித்தாலும் மக்கள் வாழ வேண்டுமே? 21 நாட்களாகத் தவிக்கும் ஏழை, நடுத்தர வர்க்க மக்கள் எதிர்பார்ப்பது பண உதவி. பணம் இருக்கிறது. மத்திய அரசின் 2020-21 செலவு பட்ஜெட்டில் ரூ.30 லட்சம் கோடி இருக்கிறது. இது நாட்டுடைய பணம், நம்முடைய பணம்.

இந்த ரூ.30 லட்சம் கோடியில் ரூ.65,000 கோடியை மக்களின் பசியைப் போக்க பிரதமர் தருவாரா மாட்டாரா என்பதுதான் கேள்வி? நம்பிக்கையுடன் பிரார்த்திக்கிறேன். நீங்களும் வேண்டிக் கொள்ளுங்கள்”.

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT