கோவில்பட்டி அருகே கடலையூர் பகுதியில் உள்ள மானாவாரி நிலத்தில் டிராக்டர் மூலம் பருத்தி செடிகள் அழிக்கப்பட்டன. 
தமிழகம்

விலை கிடைக்காததால் விளாத்திகுளம் பகுதியில் பருத்தி செடிகளை அழிக்கும் விவசாயிகள்

எஸ்.கோமதி விநாயகம்

பருத்திக்கு உரிய விலை கிடைக்காததால், விளாத்திகுளம் பகுதியில் உள்ள மானாவாரி நிலங்களில் செடிகளில் இருந்து பருத்தியை பறிக்காமல் டிராக்டரை மூலம் விவசாயிகள் அழித்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மானாவாரி நிலங்களில் நடப்பாண்டு ராபி பருவத்தில் உளுந்து, பாசி, மக்காச்சோளம், வெள்ளை சோளம், வெங்காயம், பருத்தி, மிளகாய் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பயிரிட்டனர்.

கடந்த தை மாதம் முதல் உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம், வெங்காயம், மிளகாய் போன்றவை அறுவடைக்கு வந்தன. நீண்ட கால பயிரான பருத்தி செடியில் இருந்து பருத்தி எடுக்கும் பணி மட்டும் நடந்து வருகிறது.

நடப்பாண்டு பருத்தி ஒரு குவிண்டால், ரூ.3500 முதல் ரூ.4 ஆயிரத்துக்கு தான் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இது விவசாயிகள் செய்த செலவை விட மிகவும் குறைவு.

போதிய விலை கிடைக்காததாலும், தொழிலாளர்களின் கூலி உயர்வு காரணமாக விவசாயிகளுக்கு வருவாயை விட செலவு தொகை அதிகரித்து வருகிறது.

இதனை சமாளிக்க முடியாமல் விவசாயிகள் பருத்தி பறிப்புக்கு முன்பே அதனை செடிகளுடன் டிராக்டர் மூலம் உழுது அழித்து வருகின்றனர்.

இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் அ.வரதராஜன் கூறும்போது, ”மானாவாரி நிலங்களில் பயிரிடப்படும் பருத்தி செடியில் ஏக்கருக்கு 5 குவிண்டால் வரை பருத்தி கிடைக்கும்.

அதே தோட்டப்பாசனம் என்றால் 15 குவிண்டால் வரை பருத்தி கிடைக்கும். மானாவாரி நிலங்களை பொருத்தவரை ஒரு ஏக்கருக்கு முக்கால் கிலோ பருத்தி விதை, 2 முறை உரம், 5 முறை மருந்து, 4 முறை களையெடுப்பு என ரூ.18 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம்.

கடந்த ஆண்டு ஒரு குவிண்டால் ரூ.5 ஆயிரம் வரை விலை போனது. அப்போது, பருத்தி விளைச்சல் அதிகமாகவும், தொழிலாளர்களின் கூலியும் குறைவாக இருந்தது. இந்தாண்டு எலி தொல்லை காரணமாக எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கவில்லை.

மேலும், தொழிலாளர்களின் கூலியும் இரு மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு வரை ஒரு நாள் கூலியாக ரூ.150 வரை மட்டுமே வழங்கப்பட்டது. இந்தாண்டு ரூ.250 முதல் ரூ.300 வரை வழங்கப்பட்டு வருகிறது.

இதனை சமாளிக்க முடியாததால் விவசாயிகள் பருத்தி பறிக்காமல் செடிகளிலேயே டிராக்டர் மூலம் உழுது அழித்து வருகின்றனர். தற்போது வரை சுமார் 100 ஏக்கர் வரை பருத்தி செடிகள் அழிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளை நஷ்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்ற அரசே பருத்திக்கான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்” என்றார் அவர்.

SCROLL FOR NEXT