தமிழகம்

காசர்கோடில் பணியைத் தொடர்கிறேன்: கேரள செவிலியர் பாப்பா ஹென்றியின் கரோனா சேவை

என்.சுவாமிநாதன்

கேரள செவிலியர் பாப்பா ஹென்றி பெயரில் மட்டும்தான் பாப்பா. நிஜத்தில் அவரைத் தாய் என்றே சொல்லலாம். அவர் சற்று முன்னர் என்னை அழைத்து, “சார்... ஒரு சந்தோஷமான விஷயம்” என்று சொல்லி ஒரு தகவலைப் பகிர்ந்து கொண்டார். அவர் சொன்ன விஷயத்தின் திகைப்பிலிருந்து மீண்டுவர எனக்குச் சில நிமிடங்கள் பிடித்தன.

கேரளத்தின் கோட்டயம் அரசு மருத்துவமனையில் தலைமைச் செவிலியராக இருப்பவர் பாப்பா ஹென்றி. இங்கே கரோனா வார்டில் சிகிச்சையளிக்கும் குழுவில் இருந்தார்.

கோட்டயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஐந்து கரோனா நோயாளிகளும் பூரண குணமடைந்த நிலையில், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜாவிடம் கேரளத்தின் எந்த மாவட்டத்தில் கரோனா பணிக்கு அழைத்தாலும் வரத் தயார் எனச் சொல்லியிருந்தார் பாப்பா. இதனாலேயே மொத்த கேரளமும் அவரைக் கொண்டாடியது.

இதனிடையே, உடன் பணிசெய்த சக செவிலியருக்கு கரோனா தொற்றியதால் பாப்பாவும் தனிமைப்படுத்தப்பட்டார். 14 நாள்கள் முடிந்த பின் இப்போது சொந்த ஊரான பீர்மேட்டில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பினார் பாப்பா ஹென்றி. இவரது பேட்டி 'இந்து தமிழ் திசை'யிலும் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் இன்று என்னை அழைத்த பாப்பா ஹென்றி, “சார். ஒரு சந்தோஷமான விஷயம். நான் பணிசெய்யும் கோட்டயத்தில் கரோனா வார்டில் நோயாளிகள் இல்லாததால். நான் கேட்டதுபோல் காசர்கோடில் பணி செய்ய என்னை அழைத்திருக் கிறார்கள். கேரளத்திலேயே அங்குதான் பாதிப்பு அதிகம். அங்குள்ளவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக எங்கள் கோட்டயம் மருத்துவமனையில் இருந்து 25 பேர் அழைக்கப்பட்டுள்ளோம்.

அதில் 10 பேர் மருத்துவர்கள், 10 பேர் செவிலியர்கள், 5 பேர் மருத்துவ உதவியாளர்கள். 15-ம் தேதியில் இருந்து மீண்டும் கரோனா வார்டில் சிகிச்சையளிக்கும் குழுவில் பணியைத் தொடர இருக்கிறேன்” என்றார்.

SCROLL FOR NEXT