அத்தியாவசியப் பொருளான அரிசிக்கு எந்தவிதமான தட்டுப்பாடும் தமிழகத்தில் இல்லை என்று தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் நெல் அரிசி வணிகர்கள் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் நெல் அரிசி வணிகர்கள் சங்கங்களின் சம்மேளனச் செயலாளர் ஏ.சி.மோகன் இன்று வெளியிட்ட அறிக்கை:
''தமிழகத்தில் தற்போது கரோனா (கோவிட்- 19) நோய்க் கிருமி தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவினை தமிழக அரசு 30.04.2020 வரை கால நீட்டிப்பு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், எங்கள் மாநில சம்மேளனம் தமிழக அரசோடு இணைந்து மேற்கொண்ட முயற்சியின் காரணமாக, இன்று அரிசி ஆலை கள் மற்றும் அரிசி மொத்த மற்றும் சில்லறைக் கடைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன. தற்போது, தமிழகத்தில் உள்ள அரிசி ஆலைகளில் இருப்பு உள்ள நெல்லை அரவை செய்து மக்களுக்கு வழங்கி வந்தோம்.
பிற மாநிலங்களில் இருந்து நெல் வரவு அதிகரித்தால் நலம் எனக் கருதி இதனை வேளாண்மைத் துறை செயலாளர் ககன்தீப்சிங்பேடி ஐஏஎஸ், வேளாண்மை இயக்குனர் சிரு ஐஏஎஸ் ஆகியோரின் கவனத்திற்கு சில தினங்களுக்கு முன்னர் எடுத்துச் சென்றோம். அவர்களும், நமது அண்டை மாநிலங்களான ஆந்திரா , கர்நாடகாவில் உள்ள வேளாண்மைத் துறை அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டதின் காரணமாக இன்று அந்த மாநிலங்களில் உள்ள விவசாயிகளிடம் இருந்து நெல் வரவு ( சுமார் 100 லாரிகள் நாள்தோறும் ) அதிகரித்துள்ளது என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறாம்.
எனவே, தமிழக மக்கள் அச்சம் கொள்ளாமல் தங்களது தேவைக்கேற்ப தமிழகத்தில் உள்ள அரிசிக் கடைகளில் அரிசியைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதனை எங்கள் மாநில சம்மேளனத்தின் சார்பாக தெரிவித்து கொள்கிறாம்.
அத்தியாவசியப் பொருளான அரிசிக்கு எந்த விதமான தட்டுப்பாடும் இல்லை என்பதனையும் தமிழக மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறாம்.
அதே நேரத்தில், தமிழக மக்கள் மத்திய, மாநில அரசுகள் தெரிவித்துள்ள அனைத்து சுகாதாரத் கோட்பாடுகளையும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வரும் போது மிக சரியாகக் கடைப்பிடிக்க வேண்டுமென்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்''.
இவ்வாறு மோகன் தெரிவித்துள்ளார்.