மது விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கள்ளச்சாராயம் காய்ச்சி சிக்கி வருகின்றனர். இந்நிலையில், சென்னையிலேயே கள்ளச்சாராயம் காய்ச்சிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் விதத்தில் பொதுமக்கள் ஒன்று கூடுவதைத் தடுக்க நாடெங்கும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் குடிமகன்களின் தாகத்தைத் தணிக்க சமூக விரோதிகள் மதுக்கடைகளை உடைத்து, மதுபானங்களைத் திருடி கூடுதல் விலைக்கு விற்பது, சாராயம் காய்ச்சி விற்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
பல மாவட்டங்களில் இவ்வாறு சாராயம் காய்ச்சி விற்றவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், சென்னையிலும் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்ய முயன்ற இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை அடுத்த சங்கர் நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்டது திருநீர்மலை. இப்பகுதியில் உள்ள தனியார் குவாரிக்கு நடுவே அடையாறு ஆற்றின் இடையே உள்ள முட்புதரில் சுமார் 150 லிட்டருக்கு மேல் சாராயம் காய்ச்சுவதாக பரங்கிமலை மதுவிலக்குப் பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
உடனடியாக பரங்கிமலை மதுவிலக்குத் துறை ஆய்வாளர் மகுடீஸ்வரி தலைமையில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸார் நேற்றிரவு 12 மணிக்கு மேல் அந்தப் பகுதியில் ரகசியக் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
மூன்று மணி நேரத் தேடலுக்குப்பின் நள்ளிரவு மூன்று மணி அளவில் சாராயம் காய்ச்சும் ஊரல் பேரல் இருக்குமிடம் தெரிந்தது. சிக்கிய பேரலை உடைத்து சாராயத்தை அங்கேயே ஊற்றி விட்டு, சாராயம் காய்ச்சிய நபரைக் கைது செய்தனர்.
திருநீர்மலையைச் சேர்ந்த பூரி என்கின்ற வெங்கடேசன் (37) இப்பகுதியில் தொடர்ந்து சாராயம் காய்ச்சி வந்துள்ளார். அப்பகுதி போலீஸார் இவரைப் பிடிக்கப் போகும் முன் இவருக்குத் தகவல் சென்று விடுவதால் தப்பித்து வந்தார். இம்முறை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸார் ரகசியமாக திடீர் ரெய்டு நடத்தியதால் பூரி வெங்கடேசன் சிக்கிக் கொண்டார்.