தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 11 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்க வேண்டும் என சிறப்பு திட்ட செயலாக்கத்துறை ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
திருவள்ளூரில் தொடக்கம்
தமிழகத்தில் மாணவ, மாணவி யருக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை 2011 செப்டம்பர் 15-ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 2 மாணவர்களும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைக் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரிகளில் முதலாண்டு படிக்கும் மாணவர்களும் இத்திட்டத்தில் பயன் பெறுகின்றனர். இதுவரை சுமார் 22 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு ரூ.3416.06 கோடி செலவில் மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து 2014-15 மற்றும் 2015-16-ல் மொத்தம் 11 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக ரூ.2,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் செயல்பாடுகளை சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர், ‘‘மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்குவதில் முழு இலக்கையும் இந்த ஆண்டு இறுதிக்குள் எட்ட வேண்டும்’’ என்று அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.