ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே இறைச்சிக் கடைகள் செயல்பட வேண்டும் என நெல்லை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக நெல்லை மாநகராட்சி வெளியிட்டுல்ல செய்திக் குறிப்பில், "நாட்டில் தற்போது பரவிவரும் கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சியால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக மாநகரப் பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகளில் இறைச்சி வாங்க மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் பொருட்டு இறைச்சி விற்பனை செய்வதற்கென சில குறிப்பிட்ட இடங்களை ஒதுக்கீடு செய்து அவ்விடங்களில் மட்டும் இறைச்சி விற்பனை செய்ய அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மாநகராட்சியின் திருநெல்வேலி மண்டலப் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு டவுண் கண்டியப்பேரி மருத்துவமனை அருகில் உள்ள உழவர் சந்தை மைதானத்திலும், பாளையங்கோட்டை மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு டவுண் ஆர்ச்சிலிருந்து அருனகிரி திரையரங்கு நோக்கிச் செல்லும் திட்ட சாலையிலும் இறைச்சிக் கடைகள் வைத்து வியாபாரம் செய்ய இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிடப்பட்ட இடங்களைத் தவிர வேறு எங்கும் இறைச்சி விற்பனை செய்ய அனுமதி இல்லை. மீறி விற்பனை செய்தால் கடை பூட்டி சீல் வைக்கப்படுவதுடன் காவல்துறை மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
பொதுமக்கள் மேற்குறிப்பிட்ட இடங்களில் சென்று சமூக இடைவெளியைப் பின்பற்றி உரிய முறையில் வரிசையாக நின்று இறைச்சி வாங்க கேட்டுக்கொள்ளப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் நேற்றைய நிலவரப்படி நெல்லையில் 56 பேருக்கு கரோனா தொற்று உள்ளது. இந்நிலையில், மாநகராட்சிப் பகுதிகளில் அதிகக் கெடுபிடி விதிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கெனவே மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு மூன்று வண்ணங்களில் அடையாள அட்டை வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.