தடையை தளர்த்தி, வெளியே அனுப்ப வலியுறுத்தி யாகப்பா நகர் எம்ஜிஆர் தெருவில் திரண்ட மக்கள். 
தமிழகம்

செலவுக்கு பணமின்றி தவிக்கிறோம்: மதுரையில் சீல் வைக்கப்பட்ட பகுதி மக்கள் போலீஸாருடன் வாக்குவாதம்

செய்திப்பிரிவு

மதுரையில் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட் டோர் மதுரை அரசு மருத்து வமனை சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் பகுதியான மேலூர், மதுரை நரிமேடு, தபால் தந்தி நகரில் குறுநகர், மருதுபாண்டியர் தெரு, யாகப்பா நகர் ஆகிய பகுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டு, கண்காணிக்கப்படுகின்றன. குடிநீர் உட்பட அத்தியாவசியப் பொருட்களை அவரவர் இருப்பிடத்திலேயே விநியோகிக்க மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிலையில், கரோனா தொற்றால் யாகப்பா நகரைச் சேர்ந்த 2 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இவர்களது வீடுகள் அமைந்திருக்கும் யாகப்பா நகரில் உள்ள எம்ஜிஆர், பசும்பொன், வைகை ஆகிய தெருக்கள் மற்றும் சுற்றியுள்ள சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திலுள்ள தெருக்களும் 2 நாட்களுக்கு முன்பு சீல் வைக்கப்பட்டன.

இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பில் குடிநீர், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாகனங்களில் பாதுகாப்புடன் கொண்டு சென்று வழங்க நேற்று காலை ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது எம்ஜிஆர் தெரு முன் நூறுக்கும் மேற்பட்டோர் கூடினர். அவர்கள், `அத்தியாவசியப் பொருட்களை வாங்கப் பணமில்லை. இங்கு வசிக்கும் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளிகள். நகைகளை அடகு வைத்து பணம் பெற வேண்டும். இப்பகுதியில் உள்ள தடையை தளர்த்தி தங்களை வெளியே செல்ல அனுமதிக்க வேண்டும்’ என்று போலீஸாருடன் வாக்குவாதம் செய்தனர்.

அதிகாரிகளிடம் பேசி ஏற்பாடு செய்கிறோம் எனப் போலீஸார் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT