கரோனா பாதிப்புள்ள பகுதிகளில் போலீஸார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ட்ரோன் மூலமும் கண்காணிப்பு பணிகள் நடைபெறுகின்றன.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பல்வேறு நடவடிக்கைகள் ஒன்றன்பின் ஒன்றாக எடுக்கப்பட்டு வருகின்றன. சமூக இடைவெளியை அனைவரும் உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தேவையின்றி பொதுமக்கள் வெளியே நடமாடவும், வாகனங்களை இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவலை முற்றிலும் தடுக்க சென்னையில் சுகாதாரத் துறை, மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
சென்னையில் கரோனா தொற்று உள்ள பகுதிகளாக சில பகுதிகளைக் கண்டறிந்து அந்தப் பகுதிகளில் போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். குறிப்பாக ராயபுரம், திரு.வி.க. நகர், அண்ணா நகர், கோடம்பாக்கம், தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை, பெருங்குடி, வளசரவாக்கம், திருவொற்றியூர், அடையாறு, மாதவரம், ஆலந்தூர், சோழிங்கநல்லூர் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பகுதிகளில் 144 தடை உத்தரவை போலீஸார் கடுமையாக்கி உள்ளனர். குறிப்பிட்ட பகுதிகளைச் சுற்றி தடுப்பு வேலிகள் அமைத்துள்ளனர். மேலும், போலீஸாரும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ட்ரோன்கள் மூலமாகவும் மக்கள் நடமாட்டத்தை உன்னிப்பாக கண்காணிக்கின்றனர்.
தடையை மீறுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதோடு நிறுத்திவிடாமல் அவர்களை கைது செய்தும், வாகனங்களில் வந்தால் அதை பறிமுதல் செய்தும் நடவடிக்கை எடுக்கின்றனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘கரோனா பாதிப்புள்ள பகுதிகளைக் கண்டறிந்து அந்தப் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை கடுமையாக நடைமுறைப்படுத்தி வருகிறோம். பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகள் இன்றி வெளியே வர வேண்டாம். மீறினால் கைது செய்வதைத் தவிர வேறு வழியில்லை” என்றனர்.