அனைத்து மாவட்டங்களிலும் நெல் கொள்முதல் செய்ய அரசுதயாராக உள்ளது என்று உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாட்டில் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் 2019-20-ம் ஆண்டு கொள்முதல் பருவத்தில் ஏப்ரல் 10-ம் தேதி வரை டெல்டா மாவட்டங்களில் 1,508 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. 15 லட்சத்து 78 ஆயிரத்து 934 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. டெல்டா அல்லாத மாவட்டங்களில் 532 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 4 லட்சத்து 8 ஆயிரத்து 599 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
கூட்டுறவு துறை மற்றும் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு இணையத்தின் மூலம் 21 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 578 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக 2,061 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 20 லட்சத்து 91 ஆயிரத்து 112 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இன்னும்சுமார் 7 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை விவசாயிகளிடம் இருந்துகொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
உண்மை நிலவரம் இப்படிஇருக்க, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, ஈரோடு, மதுரை ஆகிய மாவட்டங்களில் நெல் கொள்முதல் நடைபெறவில்லை என்ற பொய்யான செய்தியை பரப்பி, விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலையில் நெல் கொள்முதல் செய்ய இடைத்தரகர்கள் திட்டமிடுவதாக தகவல்கள் வந்துள்ளன. இது முற்றிலும் கண்டிக்கத்தக்க செயலாகும். இந்த விஷயத்தில் விவசாயிகள் விழிப்புடன் இருக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் தங்கு தடையின்றி நெல்கொள்முதல் செய்ய அரசு தயாராக உள்ளது. நேரடி நெல் கொள்முதலில் ஏதேனும் சிரமம் இருந்தால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தலைமை அலுவலகக் கட்டுப்பாட்டு அறையை 044 - 26426773 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.