தமிழகம்

ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக நாளை அறிவிப்பு; நாராயணசாமி தகவல்

அ.முன்னடியான்

புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக நாளை அறிவிக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் இன்று(ஏப் 12) இரவு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரி மாநிலத்தில் தற்போது 6 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 4,150 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். மாநில எல்லைகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன.

தேவையின்றி தமிழகத்திலிருந்து புதுச்சேரிக்கு வரும் பொதுமக்கள் தடை செய்யப்பட்டுள்ளனர். காவல்துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அத்தியாவசியப் பொருள்களின் தட்டுப்பாடினை நீக்கவும், பொருட்கள் விலை உயர்த்தி விற்கப்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதல்வர்களிடம் நேற்று கலந்துரையாடிய போது, கரோனாவைத் தடுக்க ஏப்ரல் 30 வரை நீட்டிக்க வேண்டும் என அனேக முதல்வர்கள் கூறியிருந்தனர். இதில் பேச எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையறிந்த பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, புதுச்சேராயின் நிலை குறித்து கேட்டறிந்தார்.

அதில், கரோனாவுக்கான மருத்துவ உபகரணங்கள் வாங்கவும், நிவாரணமாகவும் புதுச்சேரி மாநிலத்துக்கு மத்திய அரசு ரூ. 995 கோடி கொடுக்க வேண்டும். அனைத்து மாநிலத்தையும் போல புதுச்சேரிக்கும் நிதி கொடுக்க வேண்டும். மத்திய அரசின் திட்டத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மஞ்சள் அட்டைதாரர்களுக்கு அரிசி கொடுப்பதை தடுத்து நிறுத்தும் வேலையை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி செய்து வருகிறார்.

இதில் பிரதமர் தலையிட வேண்டும் என கோரிக்கை வைத்தேன். இந்த 15 நிமிஷ பேச்சுவார்த்தையில், எனது கோரிக்கைகளை கனிவுடன் கேட்ட பிரதமர், உரிய உதவிகளை செய்வதாக தெரிவித்தார்.

இதே போல, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பேசுகையில், அவர் ஓரிரு நாட்களில் முடிவெடுப்பதாக தெரிவித்தார்.
மஞ்சள் அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்க கிரண்பேடி தடையாக உள்ளார். வறுமைகோட்டுக்கு மேல் உள்ள மஞ்சள் அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்க துணை நிலை ஆளுநர் கிரண்பேடியின் பெரியளவில் முட்டுகட்டை போடுகிறார். ஆனால், புதுச்சேரி அரசு மஞ்சள் அட்டைதாரர்களுக்கு அரிசி கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கும்.

பல மாநிலங்கள் ஏற்கனவே ஊரடங்கு சட்டத்தை நீட்டித்துள்ளனர். எனவே, புதுச்சேரி மாநிலம் தனித்திருக்க முடியாது. ஊரடங்கு உத்தரவை பொறுத்தவரை அனைத்து மாநிலங்களும் ஒருங்கிணைந்து முடிவெடுக்க வேண்டும். தனித்தனியாக முடிவெடுத்தால் குழப்பங்கள் ஏற்படும். ஊரடங்கு தொடர்பாக மத்திய அரிசின் வழிமுறைகள் நாளை கொடுக்கும் என நினைக்கிறோம். அதன் பிறகு புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கை நீடிப்பது முடிவுகளை நாளை அறிவிப்போம்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT