குமரியில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பங்கு தந்தையர்கள் மட்டுமே பங்கேற்ற ஈஸ்டர் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகள் நடந்தன. அப்போது கரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்கள் மீள்வதற்கு சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.
கரோனா தொற்று, அதனால் நடைமுறையில் உள்ள ஊரடங்கு ஆகியவற்றால் நாடு முழுவதும் நேற்று ஈஸ்டர் பண்டிகை மிக எளிமையான முறையிலே கடைபிடிக்கப்பட்டன. கிறிஸ்தவர்கள் அதிகம் நிறைந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் வழக்கமாக ஈஸ்டர் பண்டிகை களைகட்டி காணப்படும். ஆனால் இதற்கு நேர்மாறாக நேற்று பெயரளவிற்கு ஈஸ்டர் பண்டிகை, மற்றும் பிரார்த்தனை நிகழ்வுகள் நடைபெற்றன. ஈஸ்டரை முன்னிட்டு முந்தைய தினம் இரவு பிரார்த்தனைகள், மற்றும் அதைத்தொடர்ந்து நடைபெறும் நள்ளிரவு திருப்பலி நிகழ்ச்சிகள் எளிமையான முறையில் நடைபெற்றது.
ஊரடங்கு அமலில் இருப்பதால் கோயில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் அனைத்தும் முடப்பட்டுள்ளன. இந்நிலையில் கரோனா வைரஸ் தாக்கத்தை முன்னிட்டு சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் கிறிஸ்தவ ஆலயங்களில் பங்கு தந்தையர்கள் முறைப்படி ஈஸ்டர் திருப்பலி நிகழ்ச்சிகளை நடத்துமாறும், கிறிஸ்துவர்கள் தேவாலயங்களுக்கு செல்லாமல் வீடுகளில் இருந்தவாறே ஈஸ்டரை எளிமையான முறையில் கடைபிடிக்குமாறும், கரோனா தொற்றில் இருந்து அனைத்து மக்களும் மீள்வதற்கு வேண்டிகொள்ளுமாறும் கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை வலியுறுத்தியிருந்தார்.
இதைத்தொடர்ந்து எப்போதும் ஈஸ்டரின்போது கிறிஸ்தவர்கள் நிறைந்து காணப்படும் நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் பேராலயம் வெறிச்சோடி காணப்பட்டது. ஈஸ்டர் நள்ளிரவு சிறப்பு திருப்பலியில் 3 பங்கு தந்தையர்கள் மட்டும் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். அப்போது கரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்கள் மீண்டு வருவதற்காக பிரார்த்திக்கப்பட்டது. வழக்கமாக கோட்டாறு சவேரியார் ஆலயத்தில் நடைபெறும் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனையில் ஆயர் பங்கேற்பது நடைமுறை. ஆனால் நேற்று எளிமையான முறையில் ஈஸ்டர் கடைபிடிக்கப்பட்டதால் ஆயர் நசரேன் சூசை ஆயர் இல்லத்திலேயே ஈஸ்டர் பிரார்த்தனையில் பங்கேற்றார்.
இதைப்போல் குமரி மாவட்டத்தில் உள்ள பிற கிறிஸ்தவ தேவாலயங்கள், சி.எஸ்.ஐ., பெந்தேகோஸ்தே சபைகள், இரட்சணிய சேனை, லண்டன் மிஷன், மற்றும் பிற கிறிஸ்தவ சபைகளிலும் போதகர்கள் மட்டுமே பிரார்த்தனையில் ஈடுபட்டனர். கிறிஸ்தவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வீடுகளில் இருந்தவாறே ஈஸ்டர் பிரார்த்தனை மேற்கொண்டனர்.