தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1075 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் தமிழக சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
“இதுவரை வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவர்கள் எண்ணிக்கை 39041 பேர், 28 நாட்கள் கண்காணிப்பை முடித்தவர்கள் எண்ணிக்கை 58 ஆயிரத்து 189 பேர், அரசு கண்காணிப்பில் உள்ளவர்கள் எண்ணிக்கை 162 , எடுக்கப்பட்ட சாம்பிள்கள் மொத்த எண்ணிக்கை 10655 ஆகும்.
தமிழகத்தில் நேற்றுவரை உறுதிப்படுத்தப்பட்ட தொற்று எண்ணிக்கை 969. இன்று உறுதி செய்யப்பட்ட தொற்று எண்ணிக்கை 106 ஆகும்.. இதன் மூலம் மொத்தம் தமிழகத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1075 ஆக உயர்ந்துள்ளது.
இன்று தொற்று கண்டறியப்பட்ட 106 பேரில் 16 பேர் பயணம் செய்ததில் நேரடியாக நோய்த்தாக்குதலுக்கு ஆளானவர்கள், 90 பேர் தொற்றுள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆவர்
இன்று சென்னையில் ஒருவர் மரணம் அடைந்ததை அடுத்து எண்ணிக்கை மரணமடைந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை முடிந்தவர்களை பொறுத்தவரை இன்று 6 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து சிகிச்சை முடிந்து திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 50 ஆகும்.
14 அரசு, 9 தனியார் லேப்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 34 மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு நடத்தப்பட்டது. 34792 களப்பணியாளர்களால் நடத்தப்பட்ட ஆய்வில் அணுகிய வீடுகளின் எண்ணிக்கை 20 லட்சத்து 47 ஆயிரத்து 289, அணுகிய மக்கள் 82 லட்சத்து 94 ஆயிரத்து 625 பேர், கண்காணிப்பு மண்டலத்தில் 459 தடுப்பு வளையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 9-ம் தேதி (IVRS) வாய்ஸ் செயலியை தொடங்கினார். அதில் பொதுமக்கள் தங்கள் தகவலை பதிவு செய்து சந்தேகங்களை தெரிந்துக்கொள்ளலாம். உங்களுக்கு நோய்த்தொற்று உள்ளதா, சாதாரண காய்ச்சலா என்பது உள்ளிட்ட அனைத்துக்குமான சந்தேகங்களை தீர்க்கும்.
இன்று தனியார் ஆய்வகத்தில் செய்யும் சோதனைக்கும் அரசே செலுத்திவிடும். தொடர்புகள், தீவிரத்தொற்று, மருத்துவமனைக்கு வரும் அனைவரையும் சரி சோதனை செய்கிறோம்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 8 பேர் மருத்துவர்கள். 2 பேர் ரயில்வே, 2 அரசு மருத்துவமனை, 4 தனியார் மருத்துவமனை டாக்டர்கள். ராபிட் டெஸ்ட் அரை மணி நேரத்தில் முதற்கட்டமாக எடுக்கக்கூடிய சோதனை. பிசிஆர் கிட்ஸ் முழுமையாக எடுக்கக்கூடிய கிட்ஸ். அது தற்போது 26 ஆயிரம் கையிருப்பில் உள்ளது. மேலும் 19 ஆயிரம் வர உள்ளது. ஆகவே போதிய அளவில் பிசிஆர் கிட்ஸ் கையிருப்பில் உள்ளது.
1.5 லட்சம் கர்ப்பிணிகள் லிஸ்ட் எடுத்து அதில் 11000 பேர் சற்று சிக்கலான நிலையில் உள்ளவர்கள் இனங்கண்டு 5 கர்ப்பிணிகளுக்கு ஒரு மருத்துவ அலுவலர் என ஒதுக்கப்பட்டு அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தனிப்பிரிவை ஏற்படுத்தியுள்ளோம்.
கரோனா தொற்று மூலம் வருபவர்களை தீவிரமாக கண்காணித்து எடுக்கிறோம். குணமடைந்தவர்களின் பிளாஸ்மாவை வைத்து ஆராய்ச்சி செய்ய ஐசிஎம்ஆர் 5 மருத்துவமனைகளில் ஆய்வு செய்ய அனுமதி கொடுத்துள்ளார்கள். இந்திய மருத்துவக் கவுன்சிலிலும் இதுகுறித்து ஆராய்ச்சி செய்ய கேட்டுள்ளோம். விரைவில் இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்க ஆய்வுகள் நடந்து வருகின்றன. ’’
இவ்வாறு பீலா ராஜேஷ் தெரிவித்தார்.