தமிழகம்

இறைச்சிக் கடைகள் தானே கிடையாது: உயிர் கோழி கிடைக்குமே-வீடு தேடிவரும் நாட்டுக் கோழிகள்

ந.முருகவேல்

ஊரடங்கு உத்தரவு மூலம் சமூக இடைவெளியை பின்பற்ற மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இருப்பினும் உணவு சார்ந்த பொருட்கள் மக்கள் வாங்க வெளியே வரும்போது சமூக இடைவெளியை பின்பற்றாமலும், எவ்வித பாதுகாப்புக் கவசங்களும் அணியாமலும் வெளியே வருவதால் கரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. குறிப்பாக இறைச்சிக் கடைகளில் நுகர்வோரின் கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றதால், இறைச்சிக் கடைகள் திறப்பது தொடர்பாக ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், அந்தந்த மாவட்டத்தின் தன்மைக்கேற்ப இறைச்சிக் கடைகள் இயங்குவது தொடர்பாக உத்தரவு பிறப்பித்து வருகின்றனர்.

அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் ஏப்ரல் 14 வரை இறைச்சிக் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அசைவ உணவுப் பிரியர்கள் சற்று கவலையோடு தான் பொழுது கழித்து வந்தனர். ஞாயிற்றுக்கிழமை என்றாலே அசைவ உணவு மீது ஈர்ப்பு ஏற்படும். இந்த நிலையில் இறைச்சிக் கடைகளில் இறைச்சி தானே கிடைக்காது. உயிர் கோழி கிடைக்குமல்லவா, எனவே கோழி வளர்ப்போரிடம் நாட்டுக் கோழி வாங்கி அசைவ உணவை அருந்தி வருகின்றன.

பண்ருட்டியை அடுத்த திருவதிகையில், உள்ள ஆயுள் காப்பீட்டு நிறுவன ஊழியர் ஒருவர், தன் வீட்டுக்கு வரும் நண்பர் மூலம் வளர்ப்புக் கோழியை வாங்கிவந்து, பழைய முறைப்படி வீட்டிலேயே கோழியை இறைச்சியை தயார் செய்து, அசைவ உணவு செய்துள்ளார். இதனால் நாட்டுக் கோழிக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. அறிமுக நபர்கள் மூலமாக முதல்நாளே கோழி வேண்டும் என ஆர்டர் செய்துவிடுகின்றனர். கோழி வளர்ப்போரும், முதல் நாளே இரவே கோழியை பிடித்து வைத்து, மறுநாள் காலையில் அறிமுக நபர் மூலமாக கோழியை விற்று விடுகின்றனர். அறிமுக நபர்கள் மூலமாக கோழிகள் விற்பனை செய்யும்போது ஒரு கோழி ரூ.350 முதல் 400 வரை விற்பனையாகிறது.

அதேநேரத்தில் பிராய்லர் கோழிக் கடை நடத்தி வந்தவர்கள், தற்போது நாட்டுக் கோழியை வளர்ப்பதுடன், அவற்றை தேவை ஏற்படுவோருக்கு உயிர் கோழியாகவும் விற்று விடுகின்றனர். கோழியை உரித்து இறைச்சியாகக் கொடுப்பதை தவிர்த்து விடுகின்றனர். குறிஞ்சிப்பாடியை அடுத்த மீனாட்சிப் பேட்டையைச் சேர்ந்த சபாபதி என்ற கோழிக்கடை உரிமையாளர், தற்போது நாட்டுக் கோழிகளை வளர்த்து வருவதோடு, அவற்றின் முட்டை மற்றும் உயிர் கோழிகளை விற்பனை செய்து வருகிறார். கோழி இறைச்சிக் கிடைக்காததால், பலர் உயிர் கோழியை வாங்கிச் சென்று அவர்களே அவற்றை உரித்து சமையல் செய்து கொள்கின்றனர் என்றார்.

SCROLL FOR NEXT