முகக் கவசம் தயாரிப்பு, விழிப்புணர்வு பாடல், சமையல், விளையாட்டு என கரோனாவை எதிர்கொள்ளும் வகையில் தங்கள் வாழ்வை வடிவமைத்துள்ளனர் ஜாலிஹோமிலுள்ள நரிக்குறவ குழந்தைகள்.
புதுச்சேரி கிருஷ்ணா நகரில் இயங்கி வரும் ‘ஜாலி ஹோம்’ என்ற சமூக தொண்டு நிறுவனத்தில் அதிகளவில் நரிக்குறவர்களின் குழந்தைகள் தங்கி படித்து வருகின்றனர்.
இங்குள்ள குழந்தைகள் பள்ளிக்கு சென்று வந்ததும் யோகா, ஆங்கில பயிற்சி, இசை கருவி மீட்டல் உட்பட பல பயிற்சிகள் கற்று தரப்படுகிறது. மொத்தம் 160க்கும் மேற்பட்ட குழந்தைகள் இங்கு வசித்து வந்தனர். மாணவர்களுக்கு, மாணவிகளுக்கு தனித்தனியாக விடுதிகள் உள்ளன. மத்திய அரசின் பால் கல்யாண் புரஸ்கார் விருது கடந்தாண்டு இந்நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது.
பள்ளி விடுமுறையால் விரும்பிய குழந்தைகள் பெற்றோரிடம் சென்ற சூழலில் இதர குழந்தைகள் ஹோமில்தான் உள்ளனர். கரோனா வைரஸ் தொற்றுஅச்சுறுத்தல் ஒருபுறம் இருக்கிறது. இதனால் வீடுகளில் குழந்தைகள் அடைந்திருப்பது போல், இங்குள்ள குழந்தைகளும் விடுதியிலேயே உள்ளனர். எனினும் இக்குழந்தைகள் மன உளைச்சலின்றி புதிய விஷயங்களை சமூக இடைவெளியுடன் வாழ்வை நகர்த்த ஜாலியாக கற்க தொடங்கியுள்ளனர்.
ஒருபுறம் குழந்தைகள் இடைவெளிவிட்டு காய்கறி நறுக்குகின்றனர். சில மூத்த குழந்தைகள் உணவை சமைக்கின்றனர். சில குழந்தைகள் பல்லாங்குழி உட்பட பாரம்பரிய விளையாட்டிலும், உயர்கல்வி பயிலும் குழந்தைகள் தையல் மிஷினில் அமர்ந்து முககவசம் தயாரிக்கின்றனர்.
இதுகுறித்து ‘ஜாலி ஹோம்’ நிறு வனர் புருனோ கூறுகையில், "குழந்தைகள் மன உளைச்சலின்றி இக்காலத்தை நகர்த்த பல்வேறு பயிற்சிகளை சமூக இடைவெளியுடன் கற்று தருகிறோம்.
பல்லாங்குழி உள்பட பாரம்பரிய விளையாட்டுகள் கற்று தருகிறோம். அத்துடன் செஸ், கேரம், மாலையில் சிலம்பு கற்கின்றனர். காய்கறி வெட்டவும், சமைக்கவும் கற்று வருகின்றனர். சாம்பார், ரசம், பொறியல் என அருமையாக கற்றுள்ளனர்.
உயர்கல்வி படிக்கும் குழந்தைகள் தற்போது தையல் கற்று வருகின்றனர். தற்போதைய தேவையான முககவசம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆர்கானிக் துணியில் மருத்துவமனை, காவல்துறை, சிறைத்துறை ஆகியோருக்கு தயாரித்து தருகிறோம்.
வீடுகளில் உள்ள குழந்தைகள் சிறிது நேரத்தில் தங்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை என்ற சூழல் உருவாகும்போது பெற்றோரை பிரிந்திருக்கும்குழந்தைகளுக்கு அந்த ஏக்கம் வராமல் இருக்கும் வகையிலும் எதிர்காலத்துக்கு பயன் தரும் வகையில் பல முயற்சிகளை சமூக இடைவெளியுடன் எடுக்கிறோம். முன்பு பல உதவிகள் பலரால் கிடைக்கும். ஊரடங்கால் உதவி கிடைப்பதில்தான் சிரமம் உள்ளது. அதை எதிர்கொள்கிறோம்" என்கிறார் நம்பிக்கையுடன்.
இசைக்கருவிகள் மீட்டலையும் இக்குழந்தைகள் கற்றுள்ளதால் கரோனா தொற்று விழிப்புணர்வு பாடலை கிராமிய மெட்டில் வடிவமைத்துள்ளனர். கை கழுவ மறக்காதீங்க என இயல்பாய் அவர்கள் பாடுவது நம் மனதில் நிறைகிறது.