புதுச்சேரியில் 5 தொழிற்பேட்டைகளில் பணியாற்றும் 10,000 தொழிலாளர்களுக்கு ஏப்ரல் மாத சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் மேட்டுப்பாளையம், தட்டாஞ்சாவடி, சேதராப்பட்டு, திருபுவனை, கிருமாம்பாக்கம் ஆகிய பகுதியில் தொழிற்பேட்டைகள் இயங்கி வருகின்றன. இங்கு சிறு-குறு என 500க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கரோனா தொற்று காரணமாக 20 நாட்களுக்கும் மேலாக இங்கு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் தொழிலாளருக்கு மார்ச் மாத சம்பளம் வழங்கப்பட்டு விட்டது. ஆனால் ஏப்ரல் மாத சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சிறு குறு தொழில்முனைவோர்கள் அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில், தொழிற்சாலைகள் முழுமையாக இயங்கவில்லை. வெளிமாநிலங்களில் இருந்து கச்சா பொருட்கள் வராத காரணத்தினால் உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் தொழில் என்பது முழுமையாக மறுக்கப்பட்டுள்ளது. எனவே ஏப்ரல் மாதத்திற்கான சம்பளத்தை வழங்க இயலாது என குறிப்பிட்டுள்ளனர்.
புதுச்சேரி தொழில்முனைவோர் அவைகள் சங்கத்தினர் அரசுக்கு வைத்துள்ள கோரிக்கையில், " புதுச்சேரி அரசு தொழிலாளர் காப்பீட்டுக் கழகத்தின் சார்பாக மருத்துவ விடுப்பில் ஊழியர்கள் இருப்பதுபோல் உத்தரவை பிறப்பித்து 15 நாட்களுக்கான சம்பளத்தை வழங்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்..