ஸ்ரீவைகுண்டம் அணையை அரசே தூர்வார உள்ள நிலையில், அதை தூர்வாரக்கோரி சிலர் நடத்தும் உண்ணாவிரதத்தை புறக்கணிக்குமாறு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வாரக்கோரி மதிமுக வழக்கறிஞர் ஜோயல் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில், ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வார வேண்டும் என்று தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. எனினும், பணிகள் தொடங்கப்படாததால், கிராம மக்களை அழைத்துக் கொண்டு நானே அணையை தூர்வாருவேன் என்று கூறினேன்.
இதையடுத்து அணையை தூர்வாருவதற்கான பூஜை போடப்பட்டதுடன், எனது கோரிக்கைகள் அனைத்தையும் பொதுப்பணித்துறை ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த சூழலில் அணையை தூர்வாரக்கோரி ஸ்ரீவைகுண்டத்தில் கடையடைப்பு, ரயில் மறியல் உள்ளிட்டவற்றை வரும் 31-ம் தேதி நடத்த சிலர் திட்டமிட்டுள்ளனர். இது மிகத்தவறான அணுகுமுறை ஆகும். இதில் நடுநிலையாளர்கள் பங்கேற்க வேண்டாம்'' என வைகோ கூறியுள்ளார்.