கரோனா சமூகப் பரவல் ஆகாமல் இருக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் மாநிலத்தில் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுக் கடைகள் அடைக் கப்பட்டுள்ளன. இந்நிலையில், சில இடங்களில் மதுக்கடைகளை உடைத்து மது பாட்டில்கள் திருடப்பட்டுள்ளன. இதில் சில டாஸ்மாக் ஊழியர்களே ஈடுபட்டது அதிகாரிகளை அதிர்ச்சி அடையச் செய்தது.
இதையடுத்து, கடைகளில் இருந்த மதுபாட்டில்களை டாஸ்மாக் கிட்டங்கிக்கு மாற்ற அரசு உத்தரவிட்டது. இதில் மார்ச் 24-ல் காட்டப்பட்ட மதுபாட்டில்கள் இருப்பிற்கும், தற்போது கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்ட இருப்பிற்கும் அதிக வித்தியாசம் இருந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள 200 கடைகளில் ரூ. 1 கோடிக்கும் அதிகமான மது பாட்டில்கள் இருப்பு குறைந்துள்ளன.
ஒவ்வொரு கடையிலும் சில ஆயிரம் ரூபாய் முதல் ரூ. 7 லட்சம் வரை மதுபாட்டில் இருப்பு குறைந்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் இந்தக் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இந்தப் பணத்தை உடனடியாக வங்கியில் செலுத்தும்படி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகமான இருப்பு குறைந்தால், கடை ஊழியர்கள் அனைவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும் என்பது நடைமுறை. மேலும் அபராதமும் செலுத்த வேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள இழப்பு குறைவுக்கு தண்டனை வழங்கினால் 90 சதவீதம் பணியாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.
விற்பனைத் தொகைக்கு ரூ. 30 சதவீதம் வரை அபராதம், ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டியிருக்கும். இதனால் ஊழியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து டாஸ்மாக் பணி யாளர்கள் சிலர் கூறுகையில், ‘இந்த முறைகேட்டுக்கு டாஸ்மாக் அதிகாரிகள், போலீஸார் என பல்வேறு தரப்பிலும் தரப்பட்ட நெருக்கடியே காரணம். தமிழக அரசு ஊரடங்கை அறிவித்தவுடன், அதற்குள் பணத்தைக் கட்டி விடலாம் எனக் கருதி சிலர் முறைகேடாக மது விற்றனர். மேலும் சிலர் கடைகளைத் திறந்து மது பாட்டில்களை எடுத்து விற்றுள்ளனர்.
கள்ளச் சந்தையிலும் கூடுதல் விலைக்கு மது தாராளமாக புழங்கியது. திடீரென 21 நாள் ஊரடங்கு அமல், மதுபாட்டில்களை கிட்டங்கியில் ஒப்படைக்கச் செய்யும் அறிவிப்பு எனப் பல்வேறு நடவடிக்கைகளால், விதிமீறி மது விற்பனையும் கூடுதல் ஆனது.
தற்போது அதிகாரிகள் நடவடிக்கை காரணமாக, ஒரே நேரத்தில் பலரும் வேலை இழந்தால் டாஸ் மாக் நிர்வாகத்துக்கும் நெருக்கடி ஏற்படும் என்றனர்.