தமிழகத்தில் கரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஏப்ரல் 10 நிலவரப்படி செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 41 பேருக்கு கரோனா தொற்றுஇருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை சீல் வைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. செங்கல்பட்டு நகராட்சியில் மொத்தம் 6 பேர் கரோனா தொற்றால்பாதிக்கப்பட்டுள்ளனர் செம்பாக்கம் நகராட்சியிலும் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்னும் பலர் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கின்றனர். மேலும் மதுராந்தகம் நகராட்சியில் 4 பேருக்கு பாதிப்புஉறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து செங்கல்பட்டு, மதுராந்தகம், செம்பாக்கம் நகராட்சி முழுவதும் சீல் வைக்கமாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதேபோல் பல்லாவரம் நகராட்சியில் 19-வது வார்டு, பம்மல், காந்தி நகர், நேதாஜி நகர் மற்றும் மறைமலை நகர் நகராட்சியில் சில இடங்களும் சீல் வைக்கப்பட்டுள்ளன. சீல் வைக்கப்பட்ட பகுதியில் அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரூ.500-க்கு 19பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்களின் தொகுப்பு இப்பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசுஅங்கீகாரம் பெற்றுள்ள சிறப்புப் பள்ளிகளின் விடுதிகள் மற்றும் காப்பகங்களில் தங்கியுள்ள மனவளர்ச்சி குன்றிய மற்றும் மனநலம் பாதித்த 450 பேருக்கு தமிழ்நாடு அரசு மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட ஆவின் பால் உணவுப் பொருட்கள் அடங்கிய பெட்டகங்களை ஆட்சியர் ஜான்லூயிஸ் வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே உள்ள வாரணவாசி, ஆம்பாக்கம், ராமானுஜபுரம், அளவூர் மற்றும் தாழையம்பட்டு கிராமங்களில் சேர்ந்த நலிவுற்றதொழிலாளர்கள் மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 800 குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் தலா 10 கிலோ அரிசியுடன் கூடிய மளிகை பொருட்களை ஆட்சியர் பொன்னையா வழங்கினார்.
தாம்பரம் அருகே கோவிலம்பாக்கம், எஸ்.கொளத்தூர் விடுதலை நகரைச் சேர்ந்த ஒருவர் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கரோனா தொற்று உறுதி செய்யப்படாத நிலையில் அவர் இறந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்துக்கு உட்பட்ட மீஞ்சூர் அடுத்தநாலூர்- 2 கிராமத்தில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவரும் வெளி மாநில தொழிலாளர்கள் 472 பேர் மற்றும் காட்டூர் அடுத்த ஊரணம்பேடு கிராமத்தில் உள்ள வெளி மாநில தொழிலாளர்கள் 230 பேர் என மொத்தம் 702 பேருக்கு உதவி பொருட்கள் அவர்களின்இருப்பிடத்துக்கு சென்று வழங்கப்பட்டது.
மேலும், பழவேற்காடு அருகே மதுரா குளத்துமேடு பகுதியில் வாழும் குடும்பஅட்டை இல்லாத 30 இருளர் இன மக்களுக்கு உதவிப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டதாக ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.