கரோனா வைரஸ் பாதிப்பில் 23 பேருக்கு தொற்று ஏற்பட்டது எப்படிஎன்று தெரியவில்லை என்று தலைமைச் செயலாளர் க.சண்முகம் தெரிவித்துள்ளதால், கரோனா வைரஸ் பாதிப்பில் தமிழகம் மூன்றாம் கட்டமான சமூக பரவலுக்கு சென்றுவிட்டதா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பும் உயிரிழப்பும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் அவர்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று சுகாதாரத் துறை தெரிவிக்கிறது.
வைரஸ் தொற்று எப்படி ஏற்பட்டது என்பதை கண்டுபிடிக்க முடியாத நிலையில் யாரும் இல்லை. தமிழகத்தில் சமூக பரவல் ஏற்படவில்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செயலாளர் பீலா ராஜேஷும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் நேற்று முன்தினம் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தலைமைச் செயலாளர் க.சண்முகம், இதுவரை வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளவர்களில் சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மால் உள்ளிட்ட இடங்களில் பாதிக்கப்பட்டுள்ள 23 பேருக்கு தொற்று எப்படி ஏற்பட்டது என்பது தெரியவில்லை எனக் கூறினார். இதன்மூலம் கரோனா வைரஸ் பாதிப்பில் தமிழகம் மூன்றாவது நிலையான சமூக பரவலுக்குச் சென்றுவிட்டதா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
மேலும், இதனை உறுதிப்படுத்தும் விதமாக தினமும் மாலை 6 மணிக்கு கரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்துசுகாதாரத் துறை செயலாளர் பீலாராஜேஷ் செய்தியாளர்களை சந்திக்கும் இடமான டிஎம்எஸ் வளாகத்தில் சுகாதாரத் துறை ஊழியர் ஒருவர்வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.
டிஎம்எஸ் வளாகத்தில் பல்வேறு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஊழியர்ஒருவருக்கு தொற்று பாதித்திருப்பது, இங்கு பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை அச்சமடையச் செய்துள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வில் இந்தியாவில் 15மாநிலங்களில் உள்ள 36 மாவட்டங்களில் சுவாசக் கோளாறு பிரச்சினையுடன் இருக்கும் நோயாளிகளை பரிசோதனை செய்ததில், அவர்களில் 40 சதவீதம் பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. முக்கியமாக இவர்கள் எந்தவிதமான தொடர்பும் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். 36 மாவட்டங்களில் தமிழகத்தில் சென்னை உட்பட 5 மாவட்டங்கள் உள்ளன.
இதற்கிடையில் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் ஊழியர் ஒருவர்கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு எப்படி வைரஸ்தொற்று ஏற்பட்டது என்று தெரியவில்லை. அவர் மற்றும் அவரதுகுடும்பத்தினர், அலுவலகத்தில் அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வேறு யாருக்கெல்லாம் தொற்று உள்ளது என்பது தெரியவில்லை. அமைச்சர், செயலாளர் உட்பட உயர் அதிகாரிகள் பலர் டிஎம்எஸ் வளாகம் வந்து செல்கின்றனர். தினமும் இங்குதான் பீலா ராஜேஷும் நேற்று முன்தினம் தலைமைச் செயலாளரும் நிருபர்களை சந்தித்தனர். இங்கு வரும் நிருபர்கள் பல்வேறு இடங்களுக்குச் செல்கின்றனர். அதனால், கரோனா வைரஸ் பிரச்சினை முடியும்வரை இங்கு நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பை நிறுத்தி வைப்பது நல்லது என்றார்.