சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை மீது, தீயணைப்பு துறையின் நவீன ஸ்கை லிஃப்ட் வாகனம் மூலம் தெளிக்கப்படும் கிருமிநாசினி.படம்: க.பரத் 
தமிழகம்

தொற்று பரவ வாய்ப்பில்லாத உயரமான கட்டிடங்கள் மீது கிருமிநாசினி தெளிப்பதால் வீணாகும் நிதியும் நீரும்- கூடுதல் விழிப்புடன் செயல்பட மாநகராட்சிக்கு மக்கள் கோரிக்கை

ச.கார்த்திகேயன்

மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவும் கரோனா வைரஸை கட்டுப்படுத்த உயரமான கட்டிடங்கள் மீது அரசு துறைகள் கிருமிநாசினி தெளித்து வருவதால் அரசு நிதியும் நீரும் வீணாவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சென்னையில் மார்ச் 2-வது வாரத்தில் இருந்து சென்னை மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியத்தின் இயந்திரங்கள் மூலமாக உயரமான கட்டிடங்களில் கிருமிநாசினி தெளிப்பு பணி தொடங்கியது.

இதில் தீயணைப்பு துறையும், மாநில பேரிடர் மீட்பு படையும் இணைந்து உயரமான அரசுக் கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் கிருமிநாசினி தெளித்தன. அதை அரசு உயரதிகாரிகளும் அமைச்சர்களும் பார்வையிட்டு அப்பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.

தமிழ்நாடு வீட்டு வசதி துறையும் குடிசை மாற்று வாரியத்தின் உயரமான குடியிருப்புகள், சிஎம்டிஏ கட்டுப்பாட்டில் உள்ள கோயம்பேடு சந்தை கட்டிடங்கள், அரசு ராஜாஜி மருத்துவமனை, ராயப்பேட்டை மருத்துவமனையின் உயரமான கட்டிடங்கள் மீது கிருமிநாசினி தெளித்தன.

இப்பணிகளுக்காக பேரிடர் மேலாண்மைத் துறையிடம் இருந்து மாநகராட்சி முதல்கட்டமாக ரூ.6 கோடியும், குடிசை மாற்று வாரியம் ரூ.1 கோடியே 90 லட்சமும்,பொது விநியோகக் கழகம் சார்பில் சுமார் ரூ.45 லட்சமும் பெற்றுள்ளன.

கரோனா பாதிக்கப்பட்ட நபர் இருமும்போதும், தும்மும்போதும்வெளியேறும் நீர் திவலைகளால் பிறருக்கு தொற்று ஏற்படுகிறது. மேலும் இந்த நீர் திவலைகள் ஏதேனும் பொருளின் மீது படிந்து, அதை பிறர் கையால் தொட்டு, பின்னர் கையை மூக்கு அல்லது வாயை தொடும்போதும் அவர்களுக்கு பரவுவதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

அதனால் உயரமான கட்டிடங்கள் மீது கரோனா வைரஸ் தங்கியிருக்க வாய்ப்பே இல்லை. இந்நிலையில் அங்கு தெளிக்கப்படும் கிருமிநாசினியால் மனித ஆற்றலும் அரசு நிதியும் நீரும்தான் வீணாகிறது என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த கிருமிநாசினி தெளிப்பு முறையால் பயன் உண்டு என்றால், சென்னையில் நோய் பரவல்கட்டுப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் வெள்ளிக்கிழமை வரை 172 பேர் பாதிக்கப்பட்டு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், வெளிநாட்டினருடன் தொடர்பில் இருந்தோரை தீவிரமாக கண்காணித்திருக்க வேண்டும்.

நடிகை கவுதமி எந்த முகவரியில் வசிக்கிறார் என்று கூட விசாரிக்காமல் தனிமைப்படுத்தல் ஸ்டிக்கரை மாநகராட்சி அலுவலர்கள் ஒட்டியுள்ளனர். ஏழு கிணறு பகுதியில், ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வீட்டில் வசிக்கும் மின்வாரிய அதிகாரி ஒருவர் தினமும் பணிக்குச் சென்றுவந்துள்ளார். இவ்வாறு முக்கியமான பணிகளில் கோட்டை விடும்மாநகராட்சி நிர்வாகம், கரோனாவுக்கு தொடர்பில்லாத உயரமான கட்டிடங்கள் மீது கிருமிநாசினி தெளித்து வருவதாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.

சுகாதாரத் துறை வெளியிட்ட கிருமிநீக்கம் தொடர்பான நடைமுறைகள் குறித்த அரசாணையில், ’’தரை, மீண்டும் மீண்டும் கைகளால் தொடக்கூடிய பகுதிகளில் கிருமி நீக்கம் செய்வதன் மூலம் பெரிய அளவில் வைரஸ் பரவுவதை தடுக்க முடியும்’’ என்று குறிப்பிட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறையில், ’’கட்டிடங்களின் உள்பகுதிகளில் அதிக கவனம் செலுத்தி கிருமிநீக்கம் செய்ய வேண்டும். காற்று வீசுவது, சூரியஒளி படுவதன் காரணமாக கட்டிடங்களின் வெளிப்புறம் அந்த அளவுக்கு ஆபத்தானது இல்லை’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் உயரமான கட்டிடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருவதுதொடர்பாக சென்னை மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்ட நிலையில், இதுவரை யாரும் பதில் அளிக்கவில்லை. சிஎம்டிஏ உறுப்பினர் செயலரும் குடிசை மாற்று வாரிய மேலாண்இயக்குநருமான தா.கார்த்திகேய னிடம் கேட்டபோது, ’’உயரமான இடங்களில் கிருமிநாசினி தெளிக்கத் தேவையில்லை. அது குறித்துஅதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத் தல்கள் வழங்கப்படும்’’ என்றார்.

SCROLL FOR NEXT