தமிழகம்

மதுரையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு; பதுக்கல் காரணமா?

கே.கே.மகேஷ்

மதுரை மாவட்டத்தில் அரிசி, கோதுமை, கேழ்வரகு போன்றவற்றின் மாவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதைச் சாக்காக வைத்து சிலர் மாவு பாக்கெட்களைப் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பது தொடர்கிறது. இந்தப் பொருட்கள் போதிய அளவு இருப்பில் உள்ளன என்று மொத்த வியாபாரிகள் சொன்னாலும், சில்லறை வியாபாரிகளோ இல்லை என்று கைவிரிக்கிறார்கள்.

இது தொடர்பாக சமீபத்தில் மதுரை ஆட்சியர் டி.என்.வினய் உத்தரவின் பேரில், கோட்டாட்சியர் முருகானந்தம் தலைமையில் ஒரு குழுவினர் அதிரடி ரெய்டு நடத்தினர். அப்போது அம்மன் சன்னதி பகுதியில் உள்ள ஒரு மொத்த வியாபாரக்கடையில், தாசில்தார்கள் கோபி, வீரபத்திரன், அனீஷ் சத்தார் மற்றும் குழுவினர் தனித்தனியே சென்று பொருட்களை வாங்குவது போல விலையை விசாரித்தனர். அப்போது ரூ.1500-க்கு விற்க வேண்டிய 50 கிலோ கொண்ட ரவை மூட்டையை 5000-க்கு விற்பனை செய்வது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த மொத்த விற்பனைக் கடைக்கும், 2 கிட்டங்கிகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

ஆனாலும், பதுக்கல்காரர்கள் பயமின்றித் தவறு செய்கிறார்கள். தொடர்ந்து மாவுப் பொருட்களுக்கு மட்டுமின்றி அரிசி, பருப்பு போன்றவற்றுக்கும் கூட தட்டுப்பாடு நிலவுகிறது. பிரபல நிறுவனங்களின் பொருட்கள் வராததால், உள்ளூரிலேயே மாவு ஆலைகளில் அரைக்கப்பட்ட மாவுப் பொருட்கள் பாக்கெட் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன. ஆனால், அவற்றின் விலையும் மிக அதிகமாக இருப்பதாக நுகர்வோர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டபோது, “மதுரையில் எந்தக் கடையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அவற்றின் அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் விற்பனை செய்யப்பட்டாலும், 9751409324, 9443739522, 9500869089 ஆகிய எண்களில் புகார் செய்யலாம். பதுக்கல் பற்றிய தகவல்களையும் அரசின் கவனத்துக்குக் கொண்டுவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

அதேநேரத்தில், காய்கறிகள் அனைத்தும் மதுரையில் ஓரளவுக்கு நியாயமான விலையில் கிடைக்கின்றன. அதற்கு, மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக காய்கறிகளை வாகனங்கள் மூலம் விற்பனை செய்வதும் முக்கியக் காரணமாகும்.

SCROLL FOR NEXT