தமிழகம்

திருச்சியில் மாங்காய் கொடுத்த மந்திரி!- காரணம் புரியாமல் மக்கள் குழப்பம்

கரு.முத்து

இந்த ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பலரும் காய்கறிகள், அரிசி, நிதி என்று பல வழிகளிலும் நிவாரணங்களை வழங்கி வருகிறார்கள். அந்த வகையில், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தன் பங்கிற்கு மக்களுக்கு மாங்காய் விநியோகம் செய்திருக்கிறார்.

இன்று காலை திருச்சி பாலக்கரை பகுதிக்கு வந்தார் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன். அப்போது அங்கு வந்து நின்றது ஒரு ‘டாடா ஏஸ்’ வாகனம். அதில் நிறைய மாங்காய்கள் இருந்தன. சற்று நேரத்தில் அங்கே கட்சிக்காரர்களும் பொதுமக்களும் கூடிவிட, அவர்களுக்கு எல்லாம் வண்டியில் இருந்த மாங்காய்களை தலா ஒன்று வீதம் எடுத்துக் கொடுத்து அசத்தினார் வெல்லமண்டி நடராஜன். இதில் சிலரது அதிர்ஷ்டத்துக்கு இரண்டு மாங்காய்களும் சிக்கின.

மாங்காய் விநியோகம் முடிந்ததும் அடுத்ததாக கிருமிநாசினி தெளிக்கும் படலம் தொடங்கியது. அமைச்சர் தெருவில் இறங்கி கிருமிநாசினி தெளிக்க... மீடியாக்கள் அதைப் படம் எடுத்ததும், சென்னையில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்துக்குச் செல்வதாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார் அமைச்சர்.

திருச்சியைப் பொறுத்தவரை ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் போட்டி போட்டுக் கொண்டு பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில், திடீரென்று நிவாரணக் களத்துக்கு வந்த அமைச்சர் வெல்லமண்டி, இப்படி மாங்காயை மட்டும் வழங்கிச் சென்றதற்குக் காரணம் புரியாமல் பாலக்கரை மக்கள் தவிக்கின்றனர்.

ஒருவேளை, கபசுரக் குடிநீர் போல மாங்காயும் கரோனாவை எதிர்த்துப் போர் புரியுமோ என்னவோ என்று அதிமுகவுக்குள்ளேயே சிலர் கமெண்ட் அடிக்கிறார்கள்.

SCROLL FOR NEXT