தமிழகம்

வைகை அணையில் திங்கள் கிழமை முதல் மீன்பிடிக்க அனுமதி: போலீஸ் பாதுகாப்புடன் விற்பனைக்கு ஏற்பாடு

என்.கணேஷ்ராஜ்

வைகை அணையில் வரும் திங்கள் கிழமை முதல் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலைக் குறைக்க கம்புகள் கட்டப்பட்டு போலீஸ் பாதுகாப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணை உள்ளது. 71 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வந்து தற்போது 45.35 அடியை எட்டியுள்ளது.

இதில் 15 அடி வரை வண்டல் மண்படிந்துள்ளதால் தற்போது அணையில் மிகவும் குறைந்த அளவு தண்ணீரே தேங்கியுள்ளது. இதனால் நீர் தேங்கும் பரப்பளவும் சுருங்கிவிட்டது.

அணையில் மீன்பிடிக்க 150 மீனவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 75பரிசல்கள் இயக்கப்படுகின்றன. பிடிக்கப்படும் மீனில் மீன்வளத்துறையும், மீனவர்களும் சரிபாதியாக பகிர்ந்து கொள்வர்.

மீன்வளத்துறை சார்பில் கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்படும். ஊரடங்கு சட்டத்தினால் தற்போது மீன்பிடிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரவில் வெளியாட்கள் பலரும் மீன்களை திருட்டுத்தனமாக பிடித்து வந்தனர்.

தற்போது அணைநீரின் வெப்பநிலை அதிகமாக உள்ளது. லேசான சாரல் பெய்வதால் நீரின் மேலடுக்கு வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் அந்த அடுக்கில் உள்ள மீன்களுக்கு பிராணவாயு உரியஅளவு கிடைக்காமல் இறந்துவிடும் நிலை உள்ளது.

எனவே திங்கள் கிழமை முதல் மீன்பிடிக்க மீனவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளிவிட்டு மீன்களை பிடிக்கவும், பொதுமக்கள் நெரிசலின்றி வாங்கிச் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், ஊரடங்கினால் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. வெளியாட்கள் மீன்பிடிப்பதைத் தவிர்க்க கண்காணிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நீர்மட்டம் குறைந்துள்ளது. மீன்கள் அதிகளவில் பிடிபட வாய்ப்புள்ளதால் வரும் திங்கள் முதல் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

மீன்வாங்க வருபவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க உரிய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தற்போது இறைச்சிக்கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே மீன் வாங்க ஏராளமானோர் வர வாய்ப்புள்ளதால் போலீஸ் பாதுகாப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றனர்.

SCROLL FOR NEXT