தமிழகம்

காரைக்குடி தொகுதியில் ஆறாயிரம் பேருக்கு 600 ரூபாய் மதிப்பில் மளிகைத் தொகுப்பு: சொந்த செலவில் வழங்கும் காங்கிரஸ் எம்எல்ஏ கே.ஆர்.ராமசாமி 

குள.சண்முகசுந்தரம்

காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் வசிக்கும் ஏழைக் குடும்பங்களுக்கு தனது சொந்த செலவில் 600 ரூபாய் மதிப்பிலான மளிகைத் தொகுப்பை தொகுதி எம்எல்ஏவும் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவருமான கே.ஆர்.ராமசாமி வழங்கி வருகிறார்

ஏற்கெனவே, சிவகங்கை தொகுதியின் முன்னாள் எம்.பி.யும் அதிமுக மாவட்டச் செயலாளருமான செந்தில்நாதன் தனது சொந்த செலவில், காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் ஏழைகளுக்கு எட்டுக் காய்கறிகள் அடங்கிய சுமார் நான்கு கிலோ மதிப்பிலான காய்கறித் தொகுப்பை வழங்கினார்.

இதையடுத்து இன்று, தொகுதி எம்எல்ஏவான கே.ஆர்.ராமசாமி தனது சொந்த செலவில் 600 ரூபாய் மதிப்பிலான மளிகைத் தொகுப்பை வழங்கும் பணியைத் தொடங்கி வைத்தார்.

முதல்கட்டமாக தேவகோட்டை மற்றும் காரைக்குடி நகராட்சி பகுதிகளைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் 582 பேருக்கு தொகுதி எம்.பி.யான கார்த்தி சிதம்பரம் கையால் மளிகைத் தொகுப்பை வழங்கும் பணியைத் தொடங்கி வைத்தார் ராமசாமி. இதையும் சேர்த்து தொகுதிக்குட்பட்ட மொத்தம் ஆறாயிரம் குடும்பங்களுக்கு இந்த மளிகைத் தொகுப்புகள் வழங்கப்பட இருப்பதாக காங்கிரஸார் தெரிவித்தனர்.

இதுதவிர, தனது சொந்த ஒன்றியமான கண்ணங்குடி பகுதிக்கு உட்பட்ட 40 கிராமங்களில் எவ்வித உதவிகளும் கிடைக்காத குடும்பங்கள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு தனது சொந்தப் பணத்திலிருந்து தலா 2,000 ரூபாய் நிவாரணத் தொகையும் வழங்கினார் ராமசாமி.

SCROLL FOR NEXT