கோவை மாவட்டம் சூலூரில் போதைக்காக கை கழுவும் சானிடைசரைக் குடித்த இளைஞர் உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் சூலூரைச் சேர்ந்தவர் பெர்னார்ட் (35). சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யும் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால், அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளதால், குடிப்பழக்கத்துக்கு அடிமையான பெர்னார்ட், கடந்த இரண்டு நாட்களாக கைகளை சுத்தமாக்கிக்கொள்ள பயன்படுத்தப்படும் சானிடைசரை குடித்து வந்துள்ளார்.
உணவு ஏதும் உண்ணாமல் தொடர்ந்து சானிடைசரை மட்டுமே போதைக்காகக் குடித்து வந்ததால், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, இன்று (ஏப்.11) அதிகாலை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பெர்னார்ட் உயிரிழந்தார். இதுதொடர்பாக சூலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.